குமரி : கரைமடி வலையில் சிக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் தற்போது மீன்பிடி சீசன் மந்தமாகி உள்ளதால் மீன் வரத்து குறைந்து உள்ளது. இந்த நிலையில் நேற்று குளச்சல் சிங்காரவேலர் காலனி கடல் பகுதியில் கரைமடி வலையிழுக்கும் மீனவர்களின் வலையில் சிறுவகை மீன்கள் குறைவாக கிடைத்தன.
ஆனால் இந்த மீன்களுடன் கடலில் வீசப்பட்ட பிளாஸ்டிக் உள்ளன. இதில் ஏமாற்றம் அடைந்த மீனவர்கள் பிளாஸ்டிக் கழிவுகளை தனியாக பிரித்து அங்கு மணல் பரப்பில் குவித்து வைத்துள்ளனர். கடந்த சில நாட்களாக கரை மடிவலைகளில் சிறிய மீன்களுடன் பிளாஸ்டிக் கழிவுகளும் சேர்ந்து வருகிறது. மீன்களுக்கு பதிலாக பிளாஸ்டிக் கழிவுகள் வலையில் சிக்குவதால் கரை மடிகளை இழுக்கும் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
காற்று, கடல் சீற்றம் காலங்களில் இந்த பிளாஸ்டிக் கழிவுகள் மீண்டும் கடலில் கலக்கிறது. எனவே மணற் பரப்பில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை நகராட்சி நிர்வாகம் எடுத்துச் சென்று திடக்கழிவு மேலாண்மை திட்ட இயற்கை உரம் தயாரிக்கும் கூடத்தில் சேர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.