குமரி : வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி
கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுவதையொட்டி வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற உள்ள மண்டல அலுவலர்கள், வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் குறித்தும், பயிற்சியில் கலந்து அனைத்து அலுவலர்களுக்கு பயிற்சி வழங்குவது குறித்த கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் கூறியதாவது:- கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி, மண்டல அலுவலர்களால் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை (24.03.2024) அன்று பிற்பகல் 2 மணிக்கு கீழ்காணும் பள்ளிக்கல்லூரிகளில் பயிற்சி வழங்கப்படவுள்ளது.
அதன்படி கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கு ஆசாரிப்பள்ளம் செயின்ட் ஜோசப் மெட்ரிக்குலேசன் பள்ளியிலும், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கு நாகர்கோவில், அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், குளச்சல் சட்டமன்ற தொகுதியில் பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கு சுங்கான்கடை, செயின்ட் சேவியர் பொறியியல் கல்லூரியிலும், பத்னாபபுரம் சட்டமன்ற தொகுதியில் பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கு திருவட்டார், எக்ஸ்சல் சென்ரல் பள்ளியிலும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கு மார்த்தாண்டம், நேசமணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கு கருங்கல் பெத்லகேம் பொறியியல் கல்லூரியிலும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சிகள் நடைபெறும். இவ்வாறு தெரிவித்தார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.