ஐயப்பன் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ஐயப்பன் கோவில்
திருப்போரூர் ஓ.எம்.ஆர்., சாலையை ஒட்டி, பழமையான ஐயப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில், கார்த்திகை, மார்கழி மாதங்களில், மாலை அணிதல், சிறப்பு வழிபாடு பூஜைகள் மற்றும் மகர விளக்கு பூஜைகள் நடக்கின்றன. கடந்த 1997ல் துவங்கப்பட்ட இந்த கோவில், இரண்டாவது முறையாக, பல லட்சம் மதிப்பில் திருப்பணிகள் மேற்கொண்டு, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக நடத்த விழா குழுவினர் முடிவு செய்தனர்.
அதன்படி, இக்கோவிலில் ஐயப்ப சுவாமி விமானம், விநாயகர், தேவி கருமாரியம்மன் சன்னிதி, பெருமாள் சன்னிதி, கோவில் முகப்பு மண்டபம் உள்ளிட்டவற்றின் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கான அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி, கடந்த 18ம் தேதி காலை 9:00 மணிக்கு, கணபதி பூஜை, அனுக்ஞை, லட்சுமி, நவக்கிரக ஹோமம் பூஜை நடந்தன.
மாலை 4:00 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேச பலி, இரவு 7:00 மணிக்கு கலாகர்ஷணம், முதல் கால பூஜை, இரவு 9:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு, இரண்டாம் கால பூஜை, மாலை 5:00 மணிக்கு மூன்றாம் கால பூஜை, இரவு 9:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. நேற்று கும்பாபிஷேகத்தை யொட்டி, காலை 6:00 மணிக்கு நான்காம் கால பூஜை, தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து, காலை 10:00 மணியளவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மஹா தீபாராதனை நடந்தது. செண்டை மேளம் முழங்க நடந்த விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்