காசவளநாடு கோவிலூர் ஜெம்புகேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
தஞ்சாவூர் அருகே 18 கிராமங்களைக் கொண்ட காசவளநாட்டின் மையப்பகுதியில் அமைந்துள்ள கோவிலூரில், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜெம்புகேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர பெருவிழா 18 கிராம மக்கள் சார்பில் கொண்டாடப்படுவது வழக்கம். மேலும் பிரதோஷ நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. பழமையான இக்கோயிலில் கடந்த 2004-ம் ஆண்டு மகாகும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
இதையடுத்து மீண்டும் கோயிலை திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்திட காசவளநாட்டினரும், இந்து சமய அறநிலையத்துறையும் முடிவு செய்தனர். அதன்படி கடந்த 10.3.2023 அன்று கோயிலில் திருப்பணிக்கான பாலாலயம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழக அரசு ரூ.62 லட்சம் நிதியை திருப்பணிக்கு ஒதுக்கீடு செய்தது. மேலும் உபயதாரர்கள் மூலம் பல லட்ச ரூபாய்க்கு திருப்பணிகள் நடைபெற்றது.
இதில் ராஜகோபுரம், மூலவர் கோபுரம் மற்றும் அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், தெட்சிணாமூர்த்தி, கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர் ஆகிய பரிவார தெய்வங்களின் சன்னதிகளின் கோபுரங்களும் திருப்பணிகள் செய்யப்பட்டது. இப்பணிகள் நிறைவு பெற்றயடுத்து கடந்த மார்ச் 1 ஆம் தேதி பூர்வாங்க பூஜைகள் தொடங்கியது. இதையடுத்து மார்ச் 5 ஆம் தேதி கோவிலூரில் உள்ள கல்லணைக் கால்வாய் ஆற்றிலிருந்து புனித நீர் அடங்கிய கடம் ஊர்வலம், முளைப்பாரி ஊர்வலம் ஆகியவை நடைபெற்றது. பிரமாண்டமான யாகசாலை மண்டபத்தில் 24 குண்டங்களும், 8 வேதிகைகளும் அமைக்கப்பட்டு கடந்த 5 ஆம் தேதி மாலை முதலாம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
தொடர்ந்து வியாழக்கிழமை காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பின்னர் யாகசாலை மண்டபத்திலிருந்து மங்கள வாத்தியம் முழங்க, அதிர்வேட்டுகளின் புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு, கோயில் கோபுரத்தை அடைந்தது. இதையடுத்து வானில் கருடன் வட்டமிட காலை 11 மணிக்கு கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனையும், அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த மகாகும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் காசவளநாட்டினர் இணைந்து செய்திருந்தனர். மகாகும்பாபிஷேக விழாவைத் தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டாலாபிஷேகம் நடைபெறவுள்ளது.