சாஸ்தாநகர் அய்யப்ப சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்

செய்தியாளர் சந்திப்பு
சேலம் குரங்குச்சாவடி அருகே பெங்களூரூ பைபாஸ் சாஸ்தாநகர் ஆசிரமத்தில் குடிகொண்டிருக்கும் அய்யப்ப சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது. இதுதொடர்பாக அய்யப்பன் அறக்கட்டளை தலைவர் நடராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:- சேலம் குரங்குசாவடி அருகே பெங்களூரூ பைபாஸ் சாஸ்திரிநகர் ஆசிரமத்தில் குடிகொண்டு இருக்கும் அய்யப்ப சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நாளை மறுநாள் நடக்கிறது.
தொடர்ந்து 19-ந் தேதி 1008 கலச பூஜையும் நடக்கிறது. இந்த கும்பாபிஷேகம் 3-வது கும்பாபிஷேகமாகும். விழாவையொட்டி கடந்த 11-ந் தேதி முதல் சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் நடந்து வருகின்றன. நாளை மறுநாள் காலை 8 மணியில் இருந்து 9 மணிக்குள் அய்யப்பன் பிரதிஷ்டா பூஜையும், 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் கும்பாபிஷேகமும் நடக்கிறது. பக்தர்கள் சிரமம் இல்லாமல் வந்து செல்ல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தம் செய்வதற்கு தனி தனி பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. கும்பாபிஷேக தினத்தன்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.விழாவில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது துணை தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் சண்முகம், பொருளாளர் சரவண பெருமாள், இணை செயலாளர்கள் சீனிவாசன், சிவகுமார், ஆடிட்டர் ராஜாராம் மற்றும் நிர்வாகிகள் உடன் உள்ளனர்.
