வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
சேலம் டவுன் கடைவீதியில் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. 130 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. காலை 5.30 மணிக்கு கோ பூஜை, விக்னேஸ்வர பூஜையும், தொடர்ந்து 3-ம் காலயாக சாலை பூஜையும் நடத்தப்பட்டது. யாகசாலையில் இருந்து புனித தீர்த்தகுடம் மேளதாளங்கள் முழங்க கோபுரத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.
வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களான வரசித்தி விநாயகர், பால கிருஷ்ணன், சீதா லட்சுமண அனுமத் சமேத ராமச்சந்திர மூர்த்தி, வள்ளி-கல்யாண சுப்ரமணியர் மற்றும் நவகிரக மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக அம்மன் கருவறை மண்டப கோபுரம் மற்றும் ராஜகோபுரத்தில் உள்ள கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
பக்தர்கள் தரிசனம் விழாவில் ஏராளமான பக்தர்கள் கோவிலை சுற்றி திரண்டு இருந்தனர். அவர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
விழாவில் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், துணை மேயர் சாரதாதேவி உள்பட முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தையொட்டி கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது. டவுன் போலீஸ் உதவி கமிஷனர் ஹரிசங்கரி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.