கச்சபேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக விழா
கும்பாபிஷேகம்
சிங்கபெருமாள் கோவில் அடுத்த திருக்கச்சூர் கிராமத்தில், அஞ்சனாட்சி உடனுறை கச்சபேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு விநாயகர், முருகன் வள்ளி, தெய்வானை, சுந்தரர், விருந்திட்ட ஈஸ்வரர், பைரவர் மற்றும் கோவில் எதிரில் தேரடி அருகில் தேரடி விநாயகர் என தனித்தனி சன்னிதிகள் உள்ளன. கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
ஆண்டுதோறும் மாசி மாதம் சுந்தரருக்கு விருந்திட்ட விழா விமரிசையாக நடைபெறும். அதேபோல், இங்கு சித்திரை மாதம் 11 நாள் பிரம்மோற்சவம் விமரிசையாக நடைபெறும். இக்கோவில் கும்பாபிஷேகம், கடந்த 2005-ம் ஆண்டு நடத்தப்பட்டது. ஆகம முறைப்படி, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். 19 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை.
அதனால், பக்தர்கள் வலியுறுத்தியதைத் தொடர்ந்து, கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுத்த அறநிலையத்துறை, உபயதாரர்கள் நிதி பெற்று, கடந்த 2022ம் ஆண்டு மே மாதம், பாலாலயத்துடன் திருப்பணிகளைத் துவங்கியது.அதனால், பக்தர்கள் வலியுறுத்தியதைத் தொடர்ந்து, கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுத்த அறநிலையத்துறை, உபயதாரர்கள் நிதி பெற்று, கடந்த 2022ம் ஆண்டு மே மாதம், பாலாலயத்துடன் திருப்பணிகளைத் துவங்கியது. சுவாமி சன்னிதிகள், பிரகாரங்கள் உள்ளிட்டவற்றில் திருப்பணிகள் நடந்தன.
பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி கும்பாபிஷேக பந்தக்கால் நடப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்த நாள் குறிக்கப்பட்டது. கடந்த 15ம் தேதி காலை சாந்தி ஹோமம், அனுக்ஞையுடன் கும்பாபிஷேக பணிகள் துவங்கப்பட்டன. தொடர்ந்து, அடுத்தடுத்த நாட்களில் கணபதி ஹோமம், கோபூஜை, வாஸ்து சாந்தி ஹோமம், நாடி சந்தனம், யாக சாலை பூஜை உள்ளிட்டவை நடத்தப்பட்டன.
நேற்று காலை விஷேச ஹோமம் நடத்தப்பட்டு, கலச புறப்பாடு நடைபெற்று, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. இதில், குறு, சிறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் அன்பரசன் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தார். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.