காஞ்சியில் கோவில்களில் கும்பாபிஷேகம் விமர்சை
கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டவர்கள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு கோவில்களில் நேற்று கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. உத்திரமேரூர் ஒன்றியம், காட்டாங்குளம் ஊராட்சி, மல்லிகாபுரம் கிராம சாலை ஓரத்தில், வேப்ப மரத்தின் கீழ் முத்து மாரியம்மனை அப்பகுதியினர், முன்னோர் காலந்தொட்டு வழிபட்டு வந்தனர்.
இக்கோவிலை விரிவுபடுத்தி, விமான கோபுரத்துடன்கூடிய கட்டுமான பணி, சில மாதங்களாக நடைபெற்று வந்தது. தற்போது, திருப்பணி முழுமையாக நிறைவு பெற்றுள்ளதையடுத்து, நேற்று, காலை 10:00 மணிக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாநகராட்சி செவிலிமேடு, திரவுபதியம்மன் கோவில் வழியாக பாலாற்றாங்கரை செல்லும் வழியில் புதிதாக பெரியாண்டவர், வாழ் முனீஸ்வரர், மதுரை வீரன் பொம்மி வெள்ளையம்மன் கோவில் கட்டப்பட்டுள்ளது.
இக்கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகத்தையொட்டி, நேற்று, காலை 9:00 மணிக்கு யாகசாலையில் இருந்து கலச புறப்பாடு நடந்தது. தொடர்ந்து, மூலஸ்தான கோபுரம் மற்றும் பரிவார கோபுரங்களுக்கு புனிதநீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர்.
தொடர்ந்து பெரியாண்டவர், வாழ் முனீஸ்வரர், மதுரை வீரன், பொம்மி, வெள்ளையம்மாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. மதுரமங்கலம் அடுத்த, செல்லம்பட்டிடை கிராமத்தில், மாரியம்மன் கோவில் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா ஜன.,19ம் தேதி கிராம தேவதையான கொம்மாத்தம்மன் வழிபாடு நடந்தது.
நேற்று, காலை 8:50 மணி அளவில், மாரியம்மன் கோவில் கோபுரத்தின் மீது புனித நீரை ஊற்றி சிவாச்சாரியார் கும்பாபிஷேகம் செய்தார். இதையடுத்து, மூலவர் மாரியம்மனுக்கு புனித நீரை தெளித்து, மலர் அலங்காரம் செய்தனர்.