பூங்காவனத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம்
கும்பாபிஷேகம்
திருவள்ளூர் அருகே நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த அம்மணம்பாக்கம் அருள்மிகு பூங்காவனத்தம்மன் திருக்கோவிலின் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம், தாமரைப்பாக்கம் ஊராட்சியை சேர்ந்த அம்மணம்பாக்கம் கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு பூங்காவனத்தம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு கடந்த 1997-ம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில்,17 ஆண்டுகளுக்குப்பின்னர் இக்கோவிலை கிராம மக்கள் புனரமைத்து மகா கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.
இதை முன்னிட்டு அனுக்க்ஷை,விக்னேஸ்வர பூஜை,புன்னியாவதனம்,மகா கணபதி பூஜை,கோ பூஜை,தன பூஜை,நவக்கிரக ஹோமம், அங்குரார்பணம்,கும்ப அலங்காரம் உள்ளிட்டவை நடைபெற்றது. இன்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜைகள்,நாடி,சந்தானம், மகாபூர்ணாகுதி உள்ளிட்டவை நடைபெற்றது.இதன் பின்னர், மங்கள வாத்தியம் முழங்க புனித நீர் அடங்கிய கலசங்களை கொளத்தூர், குமரன் நகர் ரவி சிவாச்சாரியார் தலைமையில் 10 பேர் கொண்ட சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
காலை 10 மணிக்கு பூங்காவனத்தம்மன்,பிரகார மூர்த்திகள் உள்ளிட்டவைகளுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்தனர். பின்னர் கோவில் வளாகத்தில் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது நாளை முதல் 48 நாட்கள் மண்டலாபிஷேக பூஜைகள் சிறப்பாக நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில்,அம்மணம்பாக்கம் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கிராம பொதுமக்கள்,விழா குழுவினர்கள்,நிர்வாகிகள் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.