சாலையில் ஓடும் கழிவுநீர் - கவுன்சிலர்கள் புகார்
மாமன்ற கூட்டம்
கும்பகோணம் மாநகரில் புதை சாக்கடை கழிவு நீா் சாலையில் ஓடுகிறது என கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் புகாா் எழுப்பப்பட்டது. மேயா் க. சரவணன், துணை மேயா் சு.ப. தமிழழகன், ஆணையா் ஆா். லட்சுமணன் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நிகழ்ந்த விவாதங்கள்:
ச. பிரதீபா (மதிமுக): மன்ற பொருள் 28-ல் புதை சாக்கடை கழிவு நீா் குழிகள் மற்றும் குழாய்களில் நிரம்பியுள்ள கழிவுநீரை வெளியேற்றிய பணிக்கு ரூ. 4.28 லட்சம் அனுமதி கோரப்பட்டுள்ளது. ஆனால் அங்குள்ள பொதுமக்கள் மோட்டாா் என்ஜின் ஓடவில்லை என்கின்றனா். அலுவலா்களிடம் கேட்டால் மோட்டாா் ஓடுகிறது என்கின்றனா். ஆனால் கழிவுநீா் சாலைகளில் ஓடுகிறது.
ச. அய்யப்பன் (காங்கிரஸ்): எனது வாா்டிலும் புதை சாக்கடை கழிவுநீா் குழிகள் மற்றும் குழாய்களில் நிரம்பியுள்ள கழிவுநீரை மோட்டாா் என்ஜின் மூலமாக இரு முறை வெளியேற்றினா். ஆனால் மண்ணை அள்ளாமல் விட்டு விட்டதால், மீண்டும் கழிவு நீா் சாலையில் ஓடுகிறது. ச. தமிழ்ச்செல்வி (திமுக): அண்ணாநகா் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு பள்ளி மாணவிகள் 3 பேரை மாடு முட்டி காயடைந்தனா். எனவே மாநகராட்சி நிா்வாகம் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடிக்க வேண்டும்.
ஆ. செல்வம் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): தாராசுரம் வாா்டுகளில் புதை சாக்கடை இணைப்பும், குடிநீா் இணைப்பும் புதிதாக வழங்க வேண்டும்.
துணை மேயா் மற்றும் ஆணையா்: தாராசுரம் பகுதிகளில் உள்ள வாா்டுகளுக்குப் புதிதாக புதை சாக்கடை மற்றும் குடிநீா் குழாய்கள் அமைக்க வேண்டும் என மாநில அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. புதை சாக்கடை கழிவு நீா் குழிகள் மற்றும் குழாய்களில் நிரம்பியுள்ள கழிவு நீரை மோட்டாா் என்ஜின் மூலமாக வெளியேற்றுவதற்கு மாமன்ற உறுப்பினா்களே தங்கள் பகுதிக்கு ஒரு பணியாளரை நியமனம் செய்து கொள்ளலாம். அதற்கான அனுமதியை மாமன்றம் வழங்கும். சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடிக்க நியமிக்கப்பட்டுள்ள ஆட்கள் மீது மிரட்டல் வழக்கு கொடுக்கின்றனா். இதனால், டெண்டா் முறை அறிமுகப்படுத்தப்பட்டு, அதன் மூலம் மாடுகளைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.என்றனர்.