கும்பகோணத்தில் இஸ்லாமியர்கள் ரம்ஜான் சிறப்பு தொழுகை
சிறப்பு தொழுகை.
கும்பகோணத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த சிறப்பு தொழுகை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். உலகம் முழுவதும் இஸ்லாமியர்களால் ரம்ஜான் பண்டிகையானது உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஓரு பகுதியாக கும்பகோணத்தில் ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கும்பகோணத்தில் உள்ள அனைத்து இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பு, மற்றும் தஞ்சை மாவட்ட முஸ்லிம் கல்விச் சங்கம், பெரிய பள்ளிவாசல், அரக்காசியம்மாள் பள்ளிவாசல்,ஹாஜியார் பள்ளிவாசல் உள்பட ஏழு ஜமாத்துகள் சிறப்பு ரம்ஜான் தொழுகையை நடத்தினர். காலையில் நடைபெற்ற சிறப்பு தொழுகை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அனைத்து சமூக மக்களும் நல்லிணக்கத்துடன் ஓற்றுமையாக வாழவும் ஏழை எளியோர் வாழ்வில் ஏற்றம் பெறவும் சிறப்பு தொழுகை நிகழ்ச்சியில் பிரார்த்தனை செய்தனர். தொழுகை நிகழ்ச்சிக்கு பின்னர் ஒருவரை ஓருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.
இதே போன்று மேலக்காவேரி, ஆடுதுறை, அவணியாபுரம், திருநாகேஸ்வரம், திருமங்கலக்குடி, திருப்பனந்தாள், தத்துவாஞ்சேரி, கோணுளாம்பள்ளம், சோழபுரம் என பல்வேறு இடங்களிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த தொழுகை நிகழ்ச்சிகளில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். தொழுகை நிகழ்ச்சிக்கு பின்னர் இஸ்லாமியர்கள் சக இஸ்லாமியர்களுடமும் பிற மதத்தினருடனும் இனிப்புகளையும், வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.