கும்பகோணம் : கீரை அறுவடை பணிகள் தீவிரம்
அறுவடை பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள்
கீரை தெருக்களில் கூவி, கூவி விற்பனை செய்து வந்த நிலையில் தற்போது பெரிய மார்க்கெட்டுகளில், சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும் பொருளாக உள்ளது. கீரையில் ஏராளாமான சத்துக்கள் அடங்கியது பெரும்பாலான மக்கள் வாரத்தில் 1 நாளாவது கீரையை உணவில் எடுத்து கொள்கின்றனர். கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம், நடுப்படுகை, திருமற்றம்களிகை உள்ளிட்ட பகுதிகளில் நெல் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போல் வாழை, உளுந்து, பருத்தி உள்ளிட்டவை சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. தற்போது கீரையை விவசாயிகள் அதிகளவு சாகுபடி செய்திருந்தனர்.
குறுகிய கால பயிரான அவற்றை விவசாயிகள் பராமரித்து வந்த நிலையில் தற்போது அறுவடைக்கு தயாராகி உள்ளது. இதையடுத்து தொழிலாளர்கள் மூலம் கீரைகளை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விலை உயர்வு பின்னர் அந்த கீரைகளை சிறு, சிறு கட்டுகளாகக கட்டி கும்பகோணம், பட்டீஸ்வரம், தாராசுரம் உள்ளிட்ட பகுதிகளில் மார்க்கெட்டுகளுக்கும் தெரு, தெருவாகவும் விற்பனை செய்து வருகின்றனர். இதில் ஒரு கட்டு கீரை ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனையாகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், திருமற்றம் களிகை பகுதியில், கீரை, வாழை சாகுபடி அதிகளவில் நடக்கும்.
கும்பகோணத்தில் பல்வேறு சிறப்புகள் இருந்தாலும் திருமற்றம்களிகை பகுதியில் கீரை சிறப்பு என்று கூறலாம். கும்பகோணத்தின் பல்வேறு இடங்களில் வசித்து வரும் விவசாயிகள் தங்கள் வருமானத்திற்காக இந்த பகுதியில் தான் சாகுபடி மேற்கொண்டு வருகின்றனர். நிலத்தின் உரிமையாளிடம் குறிப்பிட்ட தொகையை குத்தகை பணமாக கொடுத்து சாகுபடி செய்து வருகிறோம். இந்த பகுதியில் தண்டு கீரை, முளைக்கீரை, அரைக்கீரை உள்ளிட்ட கீரை வகைகள் சாகுபடி செய்துள்ளோம். இந்த கீரைகளை தற்போது அறுவடை செய்து மொத்த வியாபாரிகளுக்கும் ,சில்லறைவியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகிறோம். நிலத்திற்கு வாடகை, ஆட்கள் கூலி என விலை உயர்ந்ததால் கீரையின் விலையும் உயர்ந்துள்ளது. விலை அதிகமாக இருந்தாலும் கீரையில் சத்துக்கள் அதிகம் என்பதால், பெரும்பாலான மக்கள் சாகுபடி செய்த இடத்திற்கு வந்து அறுவடையின் போது வாங்கி செல்கின்றனர் என்றனர்.