கும்பகோணம்: பால்குடம், காவடி எடுத்த பெண்கள்

கும்பகோணம் அருகே கொட்டையூரில் உள்ள ஸ்ரீபாலமாரியம்மன் ஆலய ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு முந்நூறுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் காவடி எடுத்து வந்தனர்.

கும்பகோணம் அருகே கொட்டையூர் வாணியத்தெருவில் அமைந்திருக்கும் ஸ்ரீபால மாரியம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதுபோல இவ்வாண்டும் 114ம் ஆண்டாக சித்திரை திருவிழாவை முன்னிட்டு கடந்த 21 ஆம் தேதி பூச்சொரிதல் மற்றும் காப்பு கட்டுதலுடன் நிகழ்ச்சி தொடங்கியது.

தினமும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காவிரியாற்றில் இருந்து சக்தி கரகம், வேல், பால்குடம், காவடி, அலகு காவடி, அக்னி கொப்பரைகளை முந்நூறுக்கும் மேற்பட்ட பக்தர்கள் எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக ஆலயம் வந்தடைந்தது. தொடர்ந்து அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பாலபிஷேகம் நடைபெற்றது. பின்னர் இரவு தீமிதி திருவிழாவும், அதனைத்தொடர்ந்து புஷ்ப பல்லாக்கில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.

நாளை விடையாற்றியுடன் இவ்வாண்டுக்கான சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், தெருவாசிகள், இளைஞர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags

Next Story