நொய்யல் நதியை பாதுகாக்க வலியுறுத்தி கும்மியாட்டம்
திருப்பூரில், பெண்கள், குழந்தைகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கும்மியாட்ட அரங்கேற்ற நிகழ்வு நடந்தது. கொங்கு மண்டலம் பல்வேறு கலைகளுக்கு பெயர் பெற்றது. இதில் இதில் மிக முக்கியமாக கும்மியாட்டம் இருந்து வருகிறது. கோவில் திருவிழாக்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் ஆண்கள், பெண்கள் என இரு தரப்பினரும் கொங்கு பகுதிகளுக்கு பெயர் பெற்ற கும்மி நடனம் ஆடுவது பலரையும் கவர்ந்து வருகிறது. இதுபோல் பலரும் இந்த கும்மியாட்டத்தை முறைப்படி கற்று அரங்கேற்றி வருகிறார்கள்.
இந்த நிலையில், வேலவன் கும்மி ஆய்வு மையம் சார்பில், நொய்யல் நதியை பாதுகாக்கவும், நொய்யல் ஆற்றில் ரசாயன கழிவுகள் கலப்பதை தடுத்து இயற்கையை காக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் சமத்துவ கும்மி அரங்கேற்ற விழா திருப்பூர், தென்னம்பாளையத்தில் உள்ள முத்தையன் கோவில் பகுதியில் நடந்தது. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கண் கவரும் வகையிலான ஒரே வண்ணத்திலான உடையணிந்து, உற்சாகமாக கும்மியாட்ட அரங்கேற்ற நிகழ்வில் பங்கேற்று ஆடினர். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக எம்எல்ஏ செல்வராஜ், மேயர் தினேஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.