ஊட்டியில் குருத்தோலை ஞாயிறு!

குருத்தோலை ஞாயிற்றுக்கிழமையான இன்று ஊட்டியில் கிறிஸ்தவர்கள் கையில் குருத்தோலைகளை ஏந்தி பவனி சென்றனர்.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு 40 நாட்கள் உபவாசம் இருந்ததாக கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் கூறப்பட்டு உள்ளது. இந்த நாட்களை கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் தவக்காலமாக கடைபிடித்து வருகின்றனர். இந்த ஆண்டு கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி முதல் தவக்காலம் தொடங்கியது. இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் தினமும் காலை, மாலை சிறப்பு பிரார்த்தனை நடந்து வருகிறது. இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைவதற்கு முன்பு எருசலேமை நோக்கி கழுதை மேல் அமர்ந்து பவனியாக சென்றார். அப்போது எருசலேம் நகரை சுற்றிலும் குருத்தோலைகளை கையில் பிடித்தபடி பாடலை பாடியவாறு சென்றனர். இது தாழ்மையின் ரூபம் என்று பைபிள் கூறுகிறது. ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமையை கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஞாயிறாக அனுசரித்து வருகின்றனர். இதையடுத்து ஊட்டி சி.எஸ்.ஐ., டிரினிட்டி தேவாலயத்தில் துவங்கிய குருத்தோலை பவனி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த தூய தாமஸ் ஆலயத்தில் நிறைவடைந்தது. இந்த குருத்தோலை பவனியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு கையில் குருத்தோலையை ஏந்திய படி பாடல்களை பாடியவாறு பவனியாக சென்றனர்.

Tags

Next Story