மயிலாடுதுறையில் நகை திருடிய தொழிலாளி கைது
மயிலாடுதுறையில் நகை திருடிய தொழிலாளியை போலீஸ் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி, ஏமப்பேர் கிராமத்தை சேர்ந்தவர் திலகர்,55; சோப் கம்பெனி நடத்தி வருகிறார். கம்பெனியில் 10க்கும் மேற்பட்டோர் வேலை செய்த வருகின்றனர். திலகர் கடந்த மே 27ம் தேதி சொந்த வேலை காரணமாக துாத்துக்குடி சென்றிருந்தார். மறுநாள், கம்பெனியில் கடந்த 5 ஆண்டாக வேலை செய்து வந்த மயிலாடுதுறையை சேர்ந்த ஜெயராஜ் மகன் ஜெயக்குமார்,32; திலகரை போனில் தொடர்பு கொண்டு, மனைவிக்கு உடல் நிலை சரியில்லை எனக் கூறிவிட்டு சொந்த ஊருக்கு சென்றார்.
கடந்த 30ம் தேதி ஊர் திரும்பிய திலகர், உடனடி பணத் தேவைக்காக நகையை அடகு வைக்க, பீரோ லாக்கரில் திறந்த போது, அதில் வைத்திருந்த 17 சவரன் நகைகளை காணவில்லை. திடுக்கிட்ட திலகர் தனது மனைவி மற்றும் கம்பெனி ஊழியர்களிடம் விசாரித்தார். அதில், விடுப்பில் சென்ற ஜெயக்குமார் தனியாக ஒரு பை எடுத்து சென்றது தெரிய வந்தது. சந்தேகமடைந்த திலகர் கடந்த 30ம் தேதி கள்ளக்குறிச்சி போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஆனந்தன், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் கவுதமன் ஆகியோர் மயிலாடுதுறைக்கு சென்று ஜெயக்குமாரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் நகைகளை திருடியதை ஒப்புக் கொண்டார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து ஜெயக்குமாரை கைது செய்த, 17 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.