நாய் குரைத்த தகராறில் பீர்பாட்டிலால் குத்தப்பட்ட தொழிலாளி சாவு
தொழிலாளி சாவு
கருப்பூரில் நாய் குரைத்த தகராறில் பீர்பாட்டிலால் குத்தப்பட்ட தொழிலாளி பரிதாப இறந்தார். இதனை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை
கருப்பூரில் நாய் குரைத்த தகராறில் பீர்பாட்டிலால் குத்தப்பட்ட தொழிலாளி பரிதாப இறந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். கருப்பூர் குள்ளக்கவுண்டனூர் 2-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் நரேந்திரன் (வயது 28), வெல்டிங் தொழிலாளி. இவர் கடந்த 29-ந் தேதி இரவு வீட்டுக்கு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசித்து வரும் மெக்கானிக் செல்வராஜ் (41) என்பவரின் வீட்டின் அருகே சென்ற போது, நரேந்திரனை பார்த்து செல்வராஜின் வளர்ப்பு நாய் குரைத்துள்ளது. இது தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் செல்வராஜின் தாயார் இந்திராணி பணியாற்றி வரும் மகளிர் தொழில் பேட்டைக்கு மறுநாள் சென்ற நரேந்திரன், உங்களுடைய நாய் என்னை தொடர்ந்து தொந்தரவு செய்து வருகிறது, சங்கிலியால் கட்டி போடுங்கள் என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார், இதையறிந்த செல்வராஜ் எனது தாயார் வேலை செய்யும் இடத்திற்கு எதற்கு சென்று சத்தம் போட்டாய் என்று கூறி கீழே கிடந்த பீர் பாட்டிலால் நரேந்திரனின் தலை, மார்பு, வயிற்றுப்பகுதியில் குத்தி, தாக்கி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த சம்பவம் குறித்து கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து செல்வராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் நரேந்திரன் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோன்மணி விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story