மதுபோதையில் கூலிதொழிலாளி மரணம் - காவல்துறை விசாரணை

மதுபோதையில் கூலிதொழிலாளி மரணம் - காவல்துறை விசாரணை

தற்கொலை

வேலூர் காவிரி ஆற்று பகுதியில் மது போதையில் மயங்கிய நிலையில் கிடந்தவர் சிகிச்சை பலனின்றி பலியானது குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரமத்திவேலூர், காசி விஸ்வநாதர் கோயில் அருகே உள்ள காவிரி ஆற்று பகுதியில் மது அருந்தி விட்டு மயங்கிய நிலையில் ஒருவர் கிடப்பதாக பரமத்தி வேலூர் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவல் அறிந்து அங்கு சென்ற காவல் துறையினர் மயங்கிய நிலையில் கிடந்த அடையாளம் தெரியாத சுமார் 40 வயது மதிக்கத்தக்க அவரை காப்பாற்றி வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவல் அறிந்து அங்கு வந்த காவல் துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து இறந்தவர் யார், எந்த ஊர், என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே உள்ள புன்செய்புகளூர் பகுதியை சேர்ந்த சக்திவேல் (43) என்பதும் கூலித்தொழிலாளி என்பதும் தற்போது நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள சிங்களாந்தபுரத்தில் குடும்பத்துடன் தங்கி கூலிவேலை செய்து வந்தது தெரியவந்தது.

மேலும் சக்திவேல் நேற்று முன்தினம் ஒட்டு போடுவதற்காக புன்செய்புகளூர்‌ சென்று வருவதாக தனது மனைவியிடம் கூறி விட்டு வந்ததும் நேற்று காலை வேலூர் காவிரி ஆற்றுப் பாலம் அருகே மது‌ அருந்தி விட்டு மயங்கிய நிலையில் கிடந்ததும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததும் தெரியவந்தது. சம்பவம் குறித்து வேலூர் காவல் துறையினர் சக்திவேல் மரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story