சிறுமிக்கி பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் தொழிலாளிக்கு சிறை !
மகளிர் நீதிமன்றம்
திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி பகுதியில் 30 வயது பெண் தனது 14 வயது மகளுடன் வசித்து வந்துள்ளார். அந்த சிறுமி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவள். அந்த பெண் 2-வதாக 40 வயது கூலித்தொழிலாளியை திருமணம் செய்து கொண்டார். ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்துள்ளனர். கடந்த ஆண்டு, அந்த தொழிலாளி வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் தனது மகள் உறவு உள்ள 14 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளார்.
சிறுமி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் தொடர்ந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அந்த சிறுமி தனது பாட்டியிடம் இதுகுறித்து கூறியுள்ளாள். இதனால் அதிர்ச்சி அடைந்த பாட்டி, சிறுமியின் தாயாரிடம் தெரிவிக்க இதுதொடர்பாக காங்கயம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த தொழிலாளி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது. போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து தொழிலாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
மகள் உறவு முறையில் உள்ள சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்துக்காக தொழிலாளிக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூபாய் 2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஸ்ரீதர் தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூபாய் 4 லட்சம் இழப்பீடு வழங்கவும் பரிந்துரை செய்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.