வெகு விமர்சையாக நடந்து முடிந்த ஏரி திருவிழா
ஏரி திருவிழா
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த வல்லண்டராமம், அண்ணாச்சி பாளையம், வேலங்காடு, பனங்காடு, ஆகிய 4 ஊர் பொதுமக்கள் சேர்ந்து வேலங்காடு பகுதியில் உள்ள ஏரியில் அமைந்து இருக்கும் அருள்மிகு பொற்கொடியம்மன் புஷ்பரத ஏரித் திருவிழா கோலாகலமாக நடந்தது.
இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா உட்பட அண்டை மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று முதலே வரத்தொடங்கினர்.
இதில் ஏராளமான பக்தர்கள் தங்கள் பாரம்பரிய வழக்கப்படி மாட்டு வண்டியில் பசுந்தளைகளை போற்றியும், தென்னை ஒலைகளை கூடாரம் போல் அமைத்தும் டிராக்டர், வேன், ஆட்டோக்களில் குடும்பத்துடன் வந்து அம்மனை வழிபட்டுச் சென்றனர்.
இதனையடுத்து வல்லண்டராமம், அண்ணாச்சி பாளையம் ஆகிய கிராமங்களில் வாணவேடிக்கையுடன் புஷ்பரதம் தேர் உலா நடந்தது. புஷ்ப ரதத்தை விரதம் இருந்த 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் தோளில் சுமந்தவாறு ஏரிக் கோவிலை வந்தடைந்தனர். இதன்பின் பக்தர்கள் தரிசனத்திற்கு மக்கள் வெள்ளத்தில் கோயில் அருகே தேர் நிலை நிறுத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து அங்கு திரண்டிருந்த பக்தர்கள் பொங்கல் வைத்து ஆடு, கோழி ஆகியவற்றை பலியிட்டும் தேரின் மீது உப்பு, மிளகு, பொரி உள்ளிட்டவைகளை தூவி தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.