தரைப்பாலம் சேதம் : விவசாயிகள் பாதிப்பு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தரைப்பாலம் சேதம் அடைந்து போக்குவரத்து துண்டிப்பால் விவசாயிகள் பாதிப்பு.....

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பிளவக்கல் பெரியார் அணைக்கு செல்லும் வழியில் உள்ள பட்டுப்பூச்சி என்ற பகுதியில் தற்போது பல லட்சம் மதிப்பீட்டில் தரைப்பாலத்தை அகற்றிவிட்டு புதிதாக மேம்பாலம் கட்டும் பணியானது நடைபெற்று வருகிறது. பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் பிளவக்கள் அணை மற்றும் அதனை சுற்றியுள்ள விவசாய நிலங்களுக்கு சென்று வர பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு தற்காலிகமாக பாலத்தின் அருகிலேயே பெரிய சிமெண்ட் குழாய்கள் வைத்து அதற்கு மேல் மண் நிரப்பி சாலை வசதி செய்து கொடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக பிளவக்கல் பெரியாறு அணை 42 அடியை எட்டியுள்ளது.இந்த அணைக்கு வினாடிக்கு 42 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் அணையில் இருந்து உபரி நீர் 50 கன அடி வீதம் திறந்து விடப்படுகிறது.

.மேலும் இப்பகுதியில் உள்ள ஓடைகளில் வரக்கூடிய தண்ணீரும் இந்த ஆற்றுப்பகுதியில் வந்து கொண்டிருப்பதால் தற்காலிகமாக அமைக்கப்பட்ட சாலையில் திடீரென சிமெண்ட் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக சாலையானது முற்றிலுமாக சேதம் அடைந்தது.சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடைப்பு ஏற்பட்ட சாலை முற்றிலுமாக அகற்றிவிட்டு ஆற்றுப்பகுதியில் வரக்கூடிய தண்ணீர் செல்வதற்கு வழி செய்தனர்.

சாலை சேதமடைந்ததால் பிளவக்கல் அணை மற்றும் அதனை சுற்றியுள்ள விவசாய பகுதிக்கு வாகனங்கள் மற்றும் டிராக்டர் உள்ளிட்ட விவசாய சம்பந்தமான பணிகளுக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில் ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருந்ததால் தற்காலிகமாக அமைக்கப்பட்ட சாலை சேதமடைந்ததில் பாதையானது துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தொடர்ச்சியாக ஆற்றுப்பகுதியில் நீர்வரத்து வந்து கொண்டிருப்பதால் இன்னும் ஒரு சில நாட்களுக்குள் விவசாயிகள் சென்று வர ஏற்றவாறு பாதை அமைக்கும் பணியினை செய்து தருவதாக தெரிவித்தனர்.

Tags

Next Story