ராசிபுரம் அருகே நிலத்தகராறு: மாமனார் மீது துப்பாக்கி சூடு
தூப்பக்கி சூட்டில் காயமடைந்தவர்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த புதுப்பட்டி அருகே கெடமலை பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி வெள்ளையன், 60. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவரின் அண்ணன் பெருமாள் அவர்களின் குழந்தைகளான கவுண்டமணி, பெருமாயி, குப்பாயி ஆகியோரை வளர்த்து திருமணம் செய்து வைத்துள்ளார்.
இந்நிலையில் மகளான குப்பாயி என்பவரை சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த சௌந்தர்ராஜனை என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். சௌந்தர்ராஜன் புதுப்பட்டி பகுதியில் மணி என்பவருக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.
வெள்ளையன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தனது 4 சென்ட் நிலத்தை வேறு ஒருவருக்கு அடமானமாக வைத்து, 20 ஆயிரம் ரூபாயை பெற்றுள்ளார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அடமான வைத்த நிலத்தை செளந்தர்ராஜன் மீட்டு பத்திரத்தை வாங்கி வைத்துக் கொண்டார்.
தகவல் அறிந்த வெள்ளையன் எனது காட்டு பத்திரத்தை நீ எதுக்கு வாங்கினாய் எனக் கூறி வெள்ளையனுக்கும், சௌந்தர்ராஜனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று ராசிபுரம் அடுத்த புதுப்பட்டி அடிவாரப்பகுதியில் உள்ள தனது அரளித் தோட்டத்தில் வெள்ளையன் வேலை செய்து பூப் பறித்துக் கொண்டிருந்த போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த செளந்தர்ராஜன் தான் மறைத்து வைத்திருந்த அவனது அனுமதி இல்லாத நாட்டுத் துப்பாக்கியால் வெள்ளையனை சுட்டுவிட்டு தலைமறைவாகி விட்டார். இதில் வெள்ளையனின் இடது மார்பில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் பலத்த காயம் அடைந்த வெள்ளையனை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு காரில் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு முதல் உதவிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு வந்த நாமகிரிப்பேட்டை போலீசார் வெள்ளையனை இடம் விசாரித்து அவரை மீட்டு மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த சௌந்தர்ராஜனை நாமகிரிப்பேட்டை காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாமனாரை மருமகன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.