பள்ளிகளில் லேப்டாப்கள் திருட்டு-எஸ்.பி.,க்கள் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை உயர்நீதிமன்றம்
மதுரை மாவட்டம் தாடையம்பட்டி கள்ளர் சீரமைப்பு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராக இருந்தவர் கலைச்செல்வி. மாணவர்களுக்கு இலவசமாக வழங்க பாதுகாப்பு அறையில் லேப்டாப்கள் வைக்கப்பட்டிருந்தன. இரவில் மர்ம நபர்கள் 71 லேப்டாப்களை திருடினர். அவற்றை கண்டுபிடிக்க முடியவில்லை என 2017ல் உசிலம்பட்டி நீதிமன்றத்தில் போலீசார் இறுதி அறிக்கை தாக்கல் செய்தனர். கலைச்செல்வியிடமிருந்து ரூ.99 ஆயிரத்து 193 ஐ வசூலிக்க மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து கலைச்செல்வி உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.இதுபோன்ற சம்பவத்தில் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியராக இருந்த சசிகலாராணி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதை எதிர்த்தும் ஓய்வுக்கால பலன்களை வழங்க உத்தரவிடக்கோரியும் அவர் மனு செய்தார்.ஏற்கனவே விசாரித்த நீதிபதி, சைபர் கிரைம் உதவியுடன் லேப்டாப்களைகண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதா, கண்டுபிடிக்க முடியவில்லை என போலீசார் இறுதி அறிக்கை தாக்கல் செய்தது ஏன், அறிவியல்பூர்வ முறையில் லேப்டாப்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்காதது ஏன் என்பதை அரசு தரப்பில் தெளிவுபடுத்த வேண்டும், என உத்தரவிட்டார்.
நேற்று விசாரித்த நீதிபதி பட்டு தேவானந்த்: அரசு தரப்பில் அளித்த பதில் திருப்திகரமாக இல்லை. மதுரை, தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி.,க்கள் நாளை (டிச.,14) ஆஜராக வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.