மறைந்த தந்தையின் பிறந்தநாள் - சிறப்பாக கொண்டாடிய மகன்கள்
ஓசூர் அருகே உள்ள மோரணப்பள்ளி கிராமத்தில் ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி திருக்கோயில் மற்றும் சித்தர் பீடம் உள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று உலக நன்மை வேண்டியும் மக்கள் நலமுடன் வாழ வேண்டியும் மிளகாய் வத்தல் யாகம் நடைபெறும். இந்த கோயிலை தவதிரு ஸ்ரீலாஸ்ரீ சப்தகிரி அம்மா என்று அழைக்க கூடிய ஏழுமலை சுவாமிகள் நிர்வாகம் செய்து வந்தால் தலைமை பூசாரியாகவும் இருந்தார். சப்தகிரி அம்மா ஏழுமலை சுவாமிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார்.
அதனைத்தொடர்ந்து இந்த கோயிலை அவரது மகன்கள் மற்றும் குடும்பத்தினர் நிர்வாகம் செய்து வருகின்றனர். உயிரிழந்த சப்தகிரி அம்மாவின் உடலை அவரது குடும்பத்தினர் கோயில் வளாகத்தில் அடக்கம் செய்து அங்கு அவருக்கு திருவுருவ சிலையையும் வடிவமைத்துள்ளனர். சப்தகிரி அம்மாவின் பிறந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் அவரது மகன்கள் மற்றும் குடும்பத்தினர் இந்த கோயிலில் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இன்று சப்தகிரி அம்மாவின் 68 வது ஜெயந்தி விழா கோயிலில் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி அவரது திருஉருவ சிலை மற்றும் வளாகம் முழுவதும் வண்ண வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இனிப்பு, காரம் உள்ளிட்ட பல்வேறு உணவுப்பொருள்களால் படையல் செய்து அலங்காரமும் செய்யப்பட்டது.
தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க சப்தகிரி அம்மாவுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அப்போது சப்தகிரி அம்மாவின் மகன்கள் மற்றும் குடும்பத்தினர் பக்தர்கள் ஆகியோர் பட்டாசுகள் வெடித்து கூடை கூடையாக மல்லிகை, ரோஜா, செண்டுமல்லி, தாமரை உள்ளிட்ட பூக்களை திருவுருவ சிலை மீது கொட்டி பூக்களால் அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து அவரது சிலைக்கு கிரீடம் அணிவித்து பாதபூஜையும் செய்தனர். பின்னர் குடும்பத்துடன் கேக் வெட்டி அவருக்கு ஊட்டி மகிழ்ந்தனர். தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் சைவ அசைவ விருந்தையும் பரிமாறினர். தந்தை மீது உள்ள பாசத்தால் ஒவ்வொரு ஆண்டும் அவரது மகன்களும் குடும்பத்தினரும் அம்மாவின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். இந்த விழாவில் ஓசூர் மற்றும் பெங்களூர் பகுதியை சேர்ந்த பக்தர்களும் கலந்து கொண்டனர்.