விருதுநகர்“விரு கேர்" இணையதள சேவை தொடக்கம்
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அரசு மருத்துவமனையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில், மகப்பேறு இறப்பு சதவிகிதத்தை குறைக்கும் வகையில் ஒருங்கிணைந்த தாய்வழி ஆபத்து தடுப்பு கட்டமைப்பு “விரு கேர்” www.virucare.in என்ற இணையதள சேவையை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் வாரம் ஒரு முறை இரும்பு சத்து மாத்திரை வழங்கும் திட்டம் மூலம் இரத்த சோகையை குறைக்கும் வகையில், கர்ப்பிணி தாய்மார்கள், வளரிளம் பெண்களுக்கும் இரும்பு சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக இரும்பு பெண்மணி திட்டம் மூலமாக இரத்த சோகை உள்ள கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் வளரிளம் பெண்களுக்கு ஊட்டசத்து பெட்டகம் வழங்கப்பட்டு வருகிறது.
இதுவரை மாவட்டத்தில் இரும்பு பெண்மணி திட்டத்தின் கீழ் 1182 வளரிளம் பெண்களுக்கும், 750 கர்ப்பிணி தாய்மார்களுக்கும் என மொத்தம் 1932 பெண்களுக்கு ஊட்டசத்து பெட்டகம் வழங்கி அவர்களுடைய இரத்தசோகை குறைபாடு சரிசெய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், விருதுநகர் மாவட்டத்தில் பிரசவத்தின் போது, தாய்மார்களுடைய இறப்பு விகிதத்தை முற்றிலுமாக குறைப்பதற்காகவும், இளம் பெண்கள் கருவுற்ற தாய்மார்களாக ஆகும்போது,
அவர்களுக்கு சிறந்த மருத்துவ வசதி கிடைப்பதை உறுதி செய்வதற்காகவும், தொடர்ச்சியாக அவர்களுடைய உடல் நலம், கர்ப்ப காலத்தில் அவர்களுடைய ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உள்ளிட்டவற்றை தொடர்ச்சியாக கண்காணித்து, நல்ல ஆரோக்கியமான தாய்மார்களாகவும், குழந்தை பேறுவை உறுதி செய்வதற்காக அவர்களுடைய தகவல்களை தொடர்ச்சியாக கண்காணிப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சிறந்த முன்னெடுப்பாக “விரு கேர்” www.virucare.in என்ற இணையதள சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ‘விரு கேர்” என்ற இணையதள சேவையின் மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள்,
ஆரம்ப சுகாதார நிலையங்கள், மகப்பேறு சிறப்பு மருத்துவமனைகள் ஒருங்கிணைக்கப்பட்டு, இந்த இடங்களில் பரிசோதனைக்கு வரக்கூடிய கர்ப்பிணி தாய்மார்களின் விபரங்கள் பதிவு செய்யப்படும். இந்த பதிவின் மூலம் சிறப்பு கவனிப்பு தேவைப்படும் கர்ப்பிணி தாய்மார்கள் இதன் மூலம் கண்காணிக்கப்பட்டு அவர்களுடைய சிறப்பு கவனிப்பு தொடர் சிகிச்சை கிராம சுகாதார செவிலியர்களால் கண்காணிப்பு செய்யப்படுவார்கள்.
இந்த ‘விரு கேர்” என்ற இணையதள சேவையின் மூலம் கர்ப்பிணி தாய்மார்கள் எந்த ஒரு மருத்துவமனைக்கு சென்றாலும் அவர்களுடைய சிகிச்சை விபரங்கள், இதற்கு முன்னர்; எடுத்துக்கொண்ட சிகிச்சைகள் குறித்து தெரிந்து கொள்ளலாம். மேலும், உயர்தொழில்நுட்ப அடிப்படையில் பெரும் சிக்கல் உள்ள கர்ப்பிணி தாய்மார்கள் வகைப்பாடு, தொடர்ச்சியான தொழில்நுட்ப அடிப்படையிலான கண்காணிப்பு மற்றும் ஆலோசனை, சிக்கல் உள்ள கர்ப்பிணி தாய்மார்களுக்கான சிறப்பு நிபுணர்களின் கண்காணிப்பு ஆகிய மருத்துவ வசதிகள் விரு கேர் இணையதள சேவை வாயிலாக வழங்கப்படும்.
இத்திட்டத்தை மாவட்டத்தில் தொடர்ச்சியாக அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், மகப்பேறு மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், மருத்துவ நிபுணர்கள் என அனைவரும் முழுமையாக எடுத்துச் சென்று முறையாக கண்காணித்தால், நிச்சயமாக கர்ப்பிணி தாயின் இறப்பினை முழுமையாக இல்லாமல் ஆக்கவும், பேறுகால குழந்தைகள் இறப்பையும் மிக குறைவாக குறைக்கவும் முடியும். அனைவரும் இந்த திட்டத்திற்கு தங்களின் தொடர்ச்சியான செயல்பாடுகள் மூலமாக உறுதுணையாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்தார்.