காவல் துறையைக் கண்டித்து வழக்குரைஞர்கள் சாலை மறியல்
தஞ்சாவூரில் புகார் மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி காவல் துறையைக் கண்டித்து வழக்குரைஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் நீதிமன்ற வளாகத்தில் ஜனவரி 8 ஆம் தேதி நிறுத்தப்பட்டிருந்த வழக்குரைஞரின் வாகனத்தைத் தவணைத் தொகை செலுத்தவில்லை எனக் கூறி தனியார் நிதி நிறுவனத்தினர் எடுத்துச் சென்றனர். நீதிமன்ற வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்து வாகனத்தை எடுத்துச் சென்றதாகவும், இது தொடர்பாக தெற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் கூறி வழக்குரைஞர்கள் தெற்கு காவல் நிலையம் முன் சச்சிதானந்த முப்பனார் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சுமார் 10 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த காவல் துறை அலுவலர்கள் நிகழ்விடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞர்களிடம் நிதி நிறுவனத்தினரை அழைத்து விசாரிப்பதாகக் கூறினர். இதையடுத்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
Next Story