உலக சுகாதார தினத்தையொட்டி சட்ட விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம்
உலக சுகாதார தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் சட்ட விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம், கல்லங்குறிச்சி கலியுக ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் வளாகத்தில் நடத்தப்பட்டது. அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும் முதன்மை மாவட்ட நீதிபதியும் ஆகிய கிறிஸ்டோபர் உத்தரவின் பேரில், இந்த முகாமினை அரியலூர் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி செந்தில் குமார்., தலைமையேற்று நடத்தினார்.
அவர் தலைமையேற்று பேசியதாவது "தனிமனித சுகாதாரம் மிகவும் அவசியமானது. அதன் மூலமே பொது சுகாதாரத்தையும் சுற்றுச்சூழலையும் மேம்படுத்த முடியும். ஆரோக்கியமான உணவுப் பழக்கமும் சரிவிகித உணவும் நமது உடலை பாதுகாக்கும்.முறையான உடற்பயிற்சி மற்றும் முக்கியமாக நடை பயிற்சி நமக்கு புத்துணர்வை அளிக்கும். சுகாதார சீர்கேடுகளை உருவாக்கும் பிரச்சினைகளுக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலமும்,நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் மூலமும் உரிய தீர்வினை பொதுமக்கள் காணலாம்.மேலும் அனைத்து விதமான சட்ட உதவி மற்றும் ஆலோசனைகளை இலவசமாக பெற மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை பொதுமக்கள் அணுகி தீர்வு பெறலாம்"என்று கூறினார்.
சித்த மருத்துவர். பொன்மொழி, மருத்துவர்கள் சாருமதி , அனுசூரியன் மற்றும் பிரவீன் தலைமையிலான மருத்துவ குழுவினர் பல்வேறு மருத்துவ ஆலோசனைகளை வழங்கி 90-க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் பரிசோதனைகளை மேற்கொண்டனர். மேலும் இந்த சட்ட விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாமிற்கு அரியலூர் மாவட்ட சமரச மைய வழக்கறிஞர்கள் . இளவரசன் .கதிரவன், சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் வழக்கறிஞர் . சவரி ஆனந்தம் ஆகியோர்கள் வருகை தந்து சிறப்புரையாற்றினர். இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை கல்லங்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் ஆர்த்தி சிவகுமார், துணைத்தலைவர். கோவிந்தசாமி மற்றும் அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தன்னார்வலர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.