குழந்தை திருமணங்களுக்கு எதிரான சட்ட விழிப்புணர்வு முகாம்
சென்னிவனம் கிராமத்தில் குழந்தை திருமணங்களுக்கு எதிரான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
அரியலூர், மே.10- அரியலூர் மாவட்டம், செந்துறை அடுத்த சென்னிவனம் கிராமத்தில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் குழந்தை திருமணங்களுக்கு எதிரான சட்ட விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முகாமை அரியலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலரும், முதன்மை சார்பு நீதிபதியுமான பி.எம்.ரைஹானா பர்வீன் தலைமை வகித்து பேசுகையில், 18 வயது பூர்த்தியடையாத பெண்ணுக்கு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றமாகும். 21 வயது பூர்த்தியடையாத ஆண் குழந்தைகளுக்கும் திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றமாகும். குழந்தை திருமணம் செய்து வைப்போருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டணை அல்லது ரூ.1 லட்சம் அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படும்.
குழந்தை திருமணத்தை தடுக்க சமூக பொறுப்புடன் ஒவ்வொரு பொதுமக்களும் முன்வர வேண்டும். உங்கள் பகுதியில் குழந்தை திருமணம் நடைபெறுவதாக உங்களுக்கு தெரியவந்தால் கிராம நிர்வாக அலுவலரிடமோ, காவல் துறையினரிடமோ அல்லது சட்டப்பணிகள் ஆணைக்குழுவிடமோ தகவல் அளித்து குழந்தை திருமணத்தை தடுக்க வேண்டும். இதைவிட எளிதாக 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் கொடுத்து குழந்தை திருமணத்தை தடுக்கலாம. தகவல் தெரிவிப்போரின் பெயர், முகவரி ரகசியம் காக்கப்படும். 18 வயது பூர்த்தியடையாமல் திருமணம் செய்யும் பெண்ணின் உடல் நலன் மிகவும் பாதிக்கப்படும். கல்வியும் பாதிக்கப்படும். பின்னர் வாழ்க்கை கேள்விக்குறியாகும். ஆகவே குழந்தை திருமணம் இல்லாத சமுதாயத்தை உருவாக்க, குழந்தை திருமணம் நடைபெறாத மாவட்டமாக அரியலூரை மாற்றிட பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றார்.
முகாமில் செந்துறை காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் கோவிந்தராஜ் , செந்தில்முருகன், 1098 சைல்டு லைன் உதவியாளர் வீரபாண்டியன், சகி ஒருங்கிணைந்த சேவை மைய உதவியார் கமலி, சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் பட்டியல் வழக்குரைஞர் தர்மராஜ் ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். முகாமில் 80க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உதவியாளர்கள் மற்றும் சென்னிவனம் ஊராட்சி மன்ற தலைவர், செயலர் ஆகியோர் செய்திருந்தனர்.