நாமக்கல் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு முகாம்

நாமக்கல் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு முகாம்

நாமக்கல் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு முகாமில் நீதிபதி டாக்டர் ராம்ராஜ் மாணவர்களிடையே பேசினார்.

நாமக்கல் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு முகாமில் நீதிபதி டாக்டர் ராம்ராஜ் மாணவர்களிடையே பேசினார்.
மாணவர்கள் நுகர்வோர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - நீதிபதி வேண்டுகோள் நாமக்கல் அரசு சட்டக் கல்லூரி மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட் நீதிபதி டாக்டர் ராமராஜ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது, ஒவ்வொரு மனிதரும் பிறந்த நாள் முதல் இறப்பதற்கு முதல் நிமிடம் வரை ஏதாவது ஒரு வகையில் நுகர்வோராகவே வாழ்கிறோம். நுகர்வோருக்கான உரிமைகளையும் பாதுகாப்பையும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் வழங்கியுள்ளது. இருப்பினும் நுகர்வோரை பாதிக்கும் செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனைப் போக்க நுகர்வோர் விழிப்புணர்வு மிக அவசியமானது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி நிர்வாகங்களும், கல்லூரியில் படிக்கும் அனைத்து மாணவ மாணவிகளுக்கு நுகர்வோர் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த பயிற்சியை நடத்த வேண்டும். இவ்வாறு வழங்கப்படும் பயிற்சியில் ஒவ்வொரு கல்லூரியிலும் குறைந்தது 50 மாணவ தன்னார்வலர்களை தேர்வு செய்து, அவர்கள் மூலம், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 321 கிராம ஊராட்சிகளிலும் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்க வேண்டும். இவ்வாறு விழிப்புணர்வு இயக்கத்தை மேற்கொண்டால், பாதிப்படையும் ஆயிரக்கணக்கான நுகர்வோர்களை பாதிப்புக்கு முன்பே காப்பாற்ற முடியும். பாதிப்படைந்த நுகர்வோர்கள் நிவாரணம் பெற எவ்வாறு நுகர்வோர் கோர்ட்டை அணுகுவது என்பதை தெரிவிக்க வேண்டும். இத்தகைய பிரச்சாரத்தை மேற்கொள்ளும் சக்தி மாணவர்களுக்கு உள்ளது. அதனை ஒருங்கிணைக்கும் திறமை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளுக்கு உள்ளது. கல்லூரி நிர்வாகங்களும் மாணவர்களும் ஒருங்கிணைந்து நாமக்கல் மாவட்டத்தை நுகர்வோர் பாதுகாப்பில் முன்னோடி மாவட்டமாக மாற்ற முயற்சிக்க வேண்டும். இது போலவே தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் நுகர்வோர் பாதுகாப்பு வலுப்பெறும் என்றார். நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலை கல்லூரி முதல்வர் கோவிந்தராஜ் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் நாமக்கல் அரசு சட்டக் கல்லூரி பேராசிரியர்கள் பிரியா, சுமதி சுவர்ணலட்சுமி, கவுரவ விரிவுரையாளர்கள் சாஜ், பிரியங்கா, செவ்வந்தி, சவுமியா ஆகியோர் விழாவில் பேசினார்கள். அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் சட்ட விழிப்புணர்வு நாடகங்களை நடத்தினர்.

Tags

Next Story