திருப்பூரில் தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு உறுப்பினர்களுடன் ஆய்வு கூட்டம்
ஆய்வு கூட்டம்
திருப்பூர் மாவட்டத்தின் அவிநாசி பல்லடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான அன்பழகன் தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் அடங்கிய குழுவினர் நேற்று காலை முதல் ஆய்வு மேற்கொண்டனர்.
இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதியம் 3 மணி முதல்7:30 மணி வரை 4 மணி நேரத்திற்கு மேலாக ஆய்வு கூட்டம் நடைபெற்றது. ஆய்வுக் கூட்டத்தில் அனைத்து அரசு துறை சார்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
ஆய்வுக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான அன்பழகன் திருப்பூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் திருப்திகரமானதாக இருந்ததாகவும் , மாவட்டம் முன்னாடி வங்கியின் மூலமாக பல்வேறு வங்கிகளில் ஆதிதிராவிடர் தொழில் முனைவோருக்கான வங்கிக் கடன் வழங்காமல் இருந்ததற்கு கண்டனம் தெரிவித்திருப்பதாகவும் , அதுவும் விரைவில் சரி செய்யப்படும் என தெரிவித்ததாகவும் பேட்டி அளித்தார்.
தொடர்ந்து திருப்பூர் மாவட்டம் அமராவதி ஆற்றின் குறுக்கே 100 கோடி மதிப்பீட்டில் புதிதாக தடுப்பணை கட்ட வேண்டும் எனவும் , மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 57 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடம் கட்ட வேண்டும், திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் சிகிச்சை பிரிவு மற்றும் மகப்பேறு பிரிவுக்கான 80 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்ட வேண்டும் உள்ளிட்ட 350 கோடி மதிப்பீட்டிலான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருப்பதாகவும் , இவை உடனடியாக தமிழக முதல்வரின் கவனத்திற்கும் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அமைச்சர்களின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டு விரைவில் திட்டங்களை துவக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும் ஆண்டிபாளையம் குளத்தை சீர்படுத்தி கூடுதல் படகுகள் இயக்குவதற்கான வாய்ப்புகள் இருந்தால் சுற்றுலாத்துறை மூலமாக அப்பணிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் சேவூர் ராமச்சந்திரன் , சிந்தனை செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.