லெமூர் கடற்கரை மூடல் - காவல்துறையினர் கண்காணிப்பு

லெமூர் கடற்கரை மூடல் - காவல்துறையினர் கண்காணிப்பு
லெமூர் கடற்கரையை அடைத்து எச்சரிக்கை பலகை
கடல் சீற்றத்தால் கன்னியாகுமரி லெமூர் கடற்கரை மூடப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம்,முழுவதும் இன்று 3-ம் நாளாக கடல் சீற்றமாக காணப்பட்டது. ஆரோக்கிய புரம் முதல் நீடோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றம் அதிகமாக உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

ராட்சத அலைகள் 10 அடி முதல் 15 அடி வரை உயரத்திற்கு எழும்பியது. கடற்கரை ஒட்டி உள்ள தூண்டில் வளைவுகளில் ராட்சத அலைகள் வேகமாக மோதியது. 3-வது நாளாக கடல் சீற்றமாக உள்ளதால் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதனால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.

ராஜாக்கமங்கலம் லெமூர் கடற்கரை பகுதியில் நேற்று பயிற்சி டாக்டர்கள் தடையை மீறி கடலில் சென்ற போது ராட்சத அலையில் சிக்கி 5 பேர் பலியானார்கள். இதையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கடற்கரை பகுதிக்கு நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. லெமூர் கடற்கரையின் நுழைவு வாயில் மூடப்பட்டு இருந்தது. நுழைவு வாயிலில் எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டிருந்தது.

நுழைவு வாயில் அருகே உள்ள பாதை வழியாக பொதுமக்கள் செல்லாத வகையில் சிவப்பு கலரில் கொடி கட்டப்பட்டு இருந்தது. லெமூர் கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகளை போலீசார் திருப்பி அனுப்பினார்கள். கடற்கரைக்குள் யாரையும் நுழைய அனுமதிக்கவில்லை.

Tags

Next Story