சிறுத்தை, கரடி நடமாட்டம்; கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை!
மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் 65 சதவீதம் வன பகுதியை கொண்டுள்ளது. இந்த வன பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டு மாடு உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இந்நிலையில் தற்போது வன பகுதிகளில் வறட்சி நிலவுவதால் வன விலங்குகள் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்கு வருவது அதிகரித்துள்ளது.
ஊட்டி அருகேயுள்ள எல்லநள்ளி, கேர்கண்டி கிராமத்தில் சிறுத்தை மற்றும் கரடி தொடர்ந்து குடியிருப்பு பகுதிக்குள் உலா வருகிறது. சிறுத்தை கிராமத்தில் உள்ள வளர்ப்பு நாய் மற்றும் ஆடுகளை வேட்டையாடி வருகிறது. இதனால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
சிறுத்தை மற்றும் கரடி குடியிருப்பு பகுதிக்குள் உலா வருவது அங்குள்ள சி.சி.டி.வி., கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால் கிராம மக்கள் மாலை நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர அச்சமடைந்துள்ளனர். வனத்துறையினர் சிறுத்தை மற்றும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.