திருப்பத்தூரை மிரட்டிய சிறுத்தை - மயக்க ஊசி செலுத்தி மீட்பு
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட சாமநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் சிறுத்தையை தேடி வந்த நிலையில் வீட்டிலிருந்து சிறுத்தை அருகே உள்ள மேரி ஹிமாகுலேட் பள்ளி வளாகத்தில் தாவியது .
அப்போது அங்கிருந்த வாட்ச்மேன் கோபால் என்பவரின் தலையில் தாக்கியது. பின்னர் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதன்பின் பள்ளியில் இருந்த சிறுத்தை அருகே உள்ள கார்செட்டில் சிறுத்தை தாவியுள்ளது. அதனைத்தொடர்ந்து மேரிஇமாக்ளேட்,YMCA,CSI, தோன்மிக்சாவியோ, உள்ளிட்ட பள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகளை பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட்ஜான் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்துவதற்காக ஓசூரில் இருந்து வரவழைக்கப்பட்டது மேலும் 20 வனத்துறை அதிகாரிகள் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாட்ச்மேன் கோபால் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கார்ஷெட்டில் சிக்கிக்கொண்ட நபர்களை அவருடைய உறவினர்கள் போனில் தொடர்புகொண்டு பேசியபோது சிறுத்தை இருக்கும் இடத்தில் இருந்து மிக அருகாமையிலேயே அவர்கள் இருப்பதாக கூறியுள்ளனர்.இதன் காரணமாக சிறுத்தை கார்செட்டில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் வனத்துறையினர், காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர், இணைந்து கார் ஷெட்டில் சிக்கிக்கொண்ட 5 பேரை 7மணிநேரம் போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டனர். மேலும் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மற்றும் மண்டல வனம் பாதுகாவலர் பத்மாவதி கோவை பகுதியை சேர்ந்த மருத்துவர் சுதாகர் ஆகியோர் தலைமையில் சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டு 10 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டனர். மேலும் இந்த சம்பவம் திருப்பத்தூர் நகரம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.