குடியாத்தம் அருகே சிறுத்தை நடமாட்டம் - மக்கள் அச்சம்!
பைல் படம்
குடியாத்தம் அருகே ராமாலை ஊராட்சி காந்தி கணவாய் பகுதி வனப்பகுதியை ஒட்டியபடி உள்ளது. இங்கு கடந்த சில தினங்களாக இரவு மற்றும் காலை வேலைகளில் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 15 தினங்களுக்கு முன்பு காந்தி கணவாய் பகுதியில் உள்ள வனப்பகுதியில் குன்றின் மீது சிறுத்தைகள் படுத்திருந்தது. இதனால் அச்சமடைந்த கிராம மக்கள் இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும் இரவு நேரங்களில் வீடுகளுக்கு அருகே உறுமியபடி சிறுத்தை சென்றதாகவும், மேய்ச்சலுக்குச் சென்ற ஆடு மற்றும் மாடுகளை அடிக்கடி கொன்று வருவதாகவும் கூறி கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் வனத்துறை அலுவலகத்தில் புகார் அளித்து வந்தனர். இந்த நிலையில் மீண்டும் காந்திகணவாய் பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளதாக கூறப்படுகிறது. 2 நாட்களுக்கு முன்பு மேய்ச்சலுக்குச் சென்ற முருகன் என்பவரின் ஆட்டை பகல் நேரத்தில் சிறுத்தை தாக்கி கடித்துள்ளது. இதனைக் கண்ட முருகன் கூச்சலிட்டவாறு கிராம மக்களை அழைத்து வருவதற்குள் சிறுத்தை ஆட்டை கொன்றுவிட்டு ஓடிவிட்டது. அதே போல சிவக்குமார் என்பவருடைய ஆட்டையும் சிறுத்தை கடித்துக் கொன்றுள்ளது. இதனால் வனப்பகுதியை ஒட்டியபடி உள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர். உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபட போவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.