குமரியில் சிறுத்தை பீதி 4 மாடுகளை குதறியதாக தகவல்
குமரி மாவட்டம், பூதப்பாண்டி அருகே தாடகை மலை அடிவாரம் பகுதி செண்பகராமன் புதூர் - ஆரல்வாய்மொழி தேசிய நெடுஞ்சாலையில் கருமேனிப் பொத்தை அருகே கருமேணி சாஸ்தா கோயில் உள்ளது. இந்தப் பகுதி பூதப்பாண்டி வனச்சரகத்திற்கு உட்பட்டதாகும். இந்த சாலையை ஒட்டி நிறைய ராட்சத பாறைகள், புதர்கள் அடர்ந்து காணப்படும்.
இந்த பகுதி வழியாக நிறைய பேர் காலை நேரத்தில் நடை பயிற்சி மேற்கொள்வது வழக்கம். நேற்று முன்தினம் காலை சுமார் 6 மணி அளவில் சிலர் அந்த வழியாக சாலையில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தனர். அப்போ சற்று தொலைவில் உள்ள ராட்சத பாறையின் மேல் சிறுத்தை இருப்பதை கண்டு கத்தி கூச்சலிட்டனர். இதை அடுத்து சிறுத்தை பாறையிலிருந்து கீழே இறங்கி சென்று விட்டது.
சிலர் சிறுத்தையை தங்களின் செல்போனில் படம் பிடித்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த நிலையில் அப்பகுதியினர் சிலர் தைரியமாக சென்று சிறுத்தை உலாவிய பகுதியில் சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு சிறுத்தை வேட்டையாடிய பன்றியின் உடல் காணப்பட்டதாக கூறுகின்றனர்.
மேலும் அப்பகுதியிர் கூறுகையில், மலையடிவார பகுதியில் சுமார் ஆயிரம் குடும்பத்தினர் வசிப்பதாகவும், செங்கல் சூளை தொழிலாளிகள் ஷெட் போட்டு வசிப்பதாகவும் தெரிகிறது. மேலும் தாடகை மலையடிவாரத்தில் மேய சென்ற 4 மாடுகளை சிறுத்தை தாக்கி கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை புகாமல் கூண்டு வைக்க வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.