வாழ்ந்து காட்டுவோம் திட்டத் தொழிலகங்களில் ஆட்சியர் ஆய்வு
விருதுநகர் மாவட்டம் மீசலூர் கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பல்பொருட்கள், பால் மதிப்புக் கூட்டுதல் பொருட்கள் உற்பத்தி செய்தல் சமுதாயத் திறன் பள்ளியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், இந்த சமுதாய திறன் பயிற்சிப் பள்ளியில் திறன் பயிற்சிக்கு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் ரூ.74,500/- நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 15 உறுப்பினர்கள் பயிற்சி பெற்று வருவதையும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பயிற்சி பெறும் பெண்களிடம் கலந்துரையாடி, வழங்கப்படும் பயிற்சிகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர், திரு.மணிகண்டன் என்பவர் இணை மானிய திட்டத்தின் மூலம் ரூ.9,60,000/- நிதி பெற்று பேப்பர் குழாய் தயாரிப்பு தொழில் செய்து வருவதையும், அதனைத் தொடர்ந்து, சுஜாதா என்பவர் ரூ.2,20,800/- நிதியுதவி பெற்று ஐஸ்கிரீம் தயாரிப்பு தொழில் நடத்தி வருவதை, மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, உற்பத்தி, வருமானம், தொழில் சந்தைப்படுத்துதல் மற்றும் விரிவுபடுத்துதல் குறித்து அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்
. முன்னதாக தாதம்பட்டி அரசுப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் செயல்பாடுகள், வழங்கப்படும் உணவுகள், அதன் தரம் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள காய்கறி தோட்டத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், பள்ளியில் அடிப்படை வசதிகள், கட்டமைப்புகள், பள்ளி குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்து, கற்பிக்கும் முறைகள், குழந்தைகளின் வாசிப்புத்திறன், எழுத்தறிவு குறித்து ஆசிரியர் மற்றும் மாணவர்களிடம் கேட்டறிந்தார்.