பெண் குழந்தைகளை காப்போம்: சைக்கிள் பேரணி.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெண்குழந்தைகளை காப்போம், போதையில்லா குமரியை உருவாக்குவோம் என்ற விழிப்புணர்வு சைக்கிள் பேரணி இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து கன்னியாகுமரி திருவேணி சங்கமம் வரை 14 வீரர்களும், ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து களியாக்காவிளைக்கு 44 வீரர்களின் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் துவக்கி வைத்தார் . மேலும் பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்ற செல்பி பாயிண்டில் மாணவ மாணவிகளுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டதோடு, விழிப்புணர்வு பதாகைகளை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிகளில் பள்ளிகள், கல்லூரி மாணவ மாணவியர்கள், தன்னார்வலர்கள் உட்பட சுமார் 300-க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள். வருவாய் கோட்டாசியர் சேதுராமலிங்கம், மாவட்ட சமூகநல அலுவலர் சரோஜினி, தேர்தல் வட்டாசியர் சுசிலா, மாவட்ட குழந்தைகள் அலகு (பொறுப்பு) பியூலா, உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.