தஞ்சாவூர் காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள நூலகம்
தஞ்சாவூர் தெற்கு காவல் நிலையத்தில் ஆய்வாளர் உள்ளிட்டோரின் முயற்சியால் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் தெற்கு காவல் நிலையத்தில் ஆய்வாளர் உள்ளிட்டோரின் முயற்சியால் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
காவல் நிலையத்தில் ஒரு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த நூலகத்தில் மாணவர்கள், இளைஞர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு தேவையான புத்தகங்கள், பள்ளி மாணவர்களுக்கான அரிய வகை புத்தகங்கள், வரலாற்று நிகழ்வு குறித்த புத்தகங்கள் என ஏறத்தாழ ஆயிரம் நூல்கள் இடம்பெற்றுள்ளன. இதற்கான முயற்சியைத் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் உள்ளிட்ட காவலர்கள் மேற்கொண்டனர்.
இதுகுறித்து காவல் ஆய்வாளர் தெரிவித்தது: பொதுமக்கள் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டால், குற்றங்களைக் குறைக்க முடியும். காவல் நிலையத்துக்கு புகார் கொடுக்கவரும் பொதுமக்கள் ஒருவித மன அழுத்தத்துடன் இருப்பர். அவர்களுக்கு மன அமைதியை ஏற்படுத்தவும், காவல் நிலையத்தைப் பார்த்து அச்சப் படுவதைத் தவிர்க்கவும் இந்த நூலகம் பயனுள்ளதாக இருக்கும். இதில் எனது சொந்தப் புத்தகங்களுடன் காவல் நிலையத்தில் பணியாற்றி மாறுதலில் சென்ற காவலர்கள் பரிசாக வழங்கிய புத்தகங்கள், சில ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் கொடுத்த புத்தகங்கள் என ஏறத்தாழ ஆயிரம் நூல்கள் வைக்கப்பட்டுள்ளன. இக்காவல் நிலையத்துக்கு பல்வேறு பிரச்னைகளுக்காக வருவோர் காத்திருக்கும் நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவிட போதிய இருக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.