மைத்துனரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

மைத்துனரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

தண்டனை விதிக்கப்பட்ட பசுபதி

பூவந்தி அருகே மைத்துனரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

மதுரை மாவட்டம், மேலூர் அருகே கொட்டாம்பட்டியைச் சேர்ந்த வர்ணம் பூசும் தொழிலாளி பசுபதி(50). இவரது மனைவி தமிழரசி. பசுபதிக்கு குடிப்பழக்கம் இருந்ததால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக பசுபதியைவிட்டு விலகி, பூவந்தி அருகே உள்ள சொக்கையன்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டில் தமிழரசி வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 2017 மார்ச்- 12ஆம் தேதி அன்று பசுபதி சொக்கம்பட்டிக்குச் சென்று, தனது மைத்துனர் பாண்டியிடமும் மாமனாரிடமும், தமிழரசியை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால், தமிழரசியை, பசுபதியுடன் அனுப்பி வைக்க மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பசுபதி அன்று இரவு மது போதையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மைத்துனர் பாண்டி தலை மீது கல்லை போட்டு கொலை செய்தார்.

இது குறித்து பூவந்தி போலீஸார் வழக்கு பதிவு செய்து பசுபதியை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சிவகங்கை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சொர்ணம் நடராஜன், குற்றவாளி பசுபதிக்கு ஆயுள் தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

Tags

Next Story