கோவில் நிர்வாகியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை
நாகர்கோவிலில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வாத்தியார் விளையில் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் நிர்வாகியாக ஸ்ரீ கிருஷ்ணா பெருமாள் (55)என்பவர் இருந்து வந்தார். கடந்த 2010 ஆம் ஆண்டு அந்த கோயில் விழாவில் அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி ரமேஷ் (51) என்பவர் மது போதையில் கோயிலுக்கு வந்தவர்களிடம் ரகளை செய்துள்ளார். இதை ஸ்ரீ கிருஷ்ண பெருமாள் கண்டித்து உள்ளார். மேலும் 14 - 11- 2010 அன்று ரமேஷ் மீது வடசேரி போலீசில் ஸ்ரீ கிருஷ்ணா பெருமாள் புகார் கொடுத்துள்ளார். போலீசார் வழக்கு பகுதி செய்தனர்.
இந்த வழக்கை வாபஸ் பெற கேட்டு ஸ்ரீ கிருஷ்ண பெருமாளை ரமேஷ் தொந்தரவு செய்ததுடன், ரகளையில் ஈடுபட்டு வந்தார். ஆனால் ஸ்ரீ கிருஷ்ணா பெருமாள் வழக்கு வாபஸ் பெறவில்லை. இந்த நிலையில் 16 - 5 - 2016 அன்று ஸ்ரீ கிருஷ்ண பெருமாள் வாத்தியார் விளையில் நின்ற போது அங்கு வந்த ரமேஷ் கம்பியால் ஸ்ரீகிருஷ்ண பெருமாளை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேஷ் கைது செய்தனர். இந்த வழக்கு நாகர்கோவில் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரித்த நீதிபதி கார்த்திகேயன் நேற்று தீர்ப்பு வழங்கினார். குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ரமேஷுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அரசு வக்கீல் லீனஸ் ராஜ் ஆஜரானார்.