மாணவி குத்திக்கொலை: வாலிபருக்கு ஆயுள்

மாணவி குத்திக்கொலை: வாலிபருக்கு ஆயுள்

மாணவி கொலை

மதுரவாயலை சேர்ந்த மாணவியை குத்திக்கொலை செய்த வாலிபருக்கு ஆயுள்அ தண்டனை விதித்தது தீர்ப்பளித்தது நீதிமன்றம்.

மதுரவாயலைச் சேர்ந்தவர் அஸ்வினி. கே.கே.நகரில் உள்ள கல்லுாரியில் படித்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் அழகேசன், வயது 26. ஒருதலையாய் அஸ்வினியை காதலித்துள்ளார். வீட்டில் தனியாக அஸ்வினி இருக்கும் போது, உள்ளே நுழைந்து மிரட்டி, தாலி கட்டியுள்ளார்.

இதுகுறித்து, மதுரவாயல் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அழகேசனை எச்சரித்து, போலீசார் விடுவித்தனர். கடந்த 2018 மார்ச் 9 ம் தேதி, கல்லுாரியில் இருந்து வெளியே வந்த அஸ்வினியை வழிமறித்து, கழுத்தில் கத்தியால் குத்தினார். இதில், அஸ்வினி இறந்தார். கே.கே.நகர் போலீசார் அழகேசனை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த, மகளிர் நீதிமன்ற நீதிபதி முகமது பரூக் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது,

புலன்விசாரணை அமைப்பு, பல குறைபாடுகளை செய்திருந்தாலும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆதாரங்கள், சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிப்பதற்கு போதுமானதாக உள்ளது. காதல் தோல்வி தான், சம்பவத்துக்கான நோக்கம் என்பது, சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தின் போது, அழகேசனுக்கு வயது 26. இது, அரிதான வழக்கு அல்ல. அவரது வயது, பின்னணி, திருந்துவதற்கான வாய்ப்பு ஆகியவற்றை கருதி, ஆயுள் தண்டனையும், 10,500 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. மகளிடம் கிடைக்க வேண்டிய அன்பு, ஆதரவை, அவரது தாய் இழந்து விட்டார்.

இந்தச் சம்பவம், அவரது மனதில் நிரந்தர காயத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, அவருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டோர் இழப்பீடு நிதியத்தில் இருந்து உரிய இழப்பீடு பெற்றுத் தர, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு, இந்த நீதிமன்றம் பரிந்துரைக்கிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Tags

Next Story