மாமல்லபுரம் சிற்பத்தின் மீது சுண்ணாம்பு கலவை !
மாமல்லபுரம் சிற்பத்தை பாதுகாக்க தீர்மானித்த தொல்லியல் துறையினர், அதன் மீதே தற்போது சுண்ணாம்பு கலவை பூசி உறுதிப்படுத்தி வருகின்றனர்.
மாமல்லபுரத்தில், 1, 500 ஆண்டுகளுக்கு முந்தைய பல்லவர் கால சிற்பங்கள் உள்ளன. இங்குள்ள பாறை குன்றுகளில், ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு, குடைவரைகள், கடற்கரை கோவில் ஆகியவை வடிக்கப்பட்டுள்ளன. கடற்கரை கோவில் உட்பிரகாரம், முற்றுப்பெறாத மாதிரி அர்ஜுனன் தபசு உள்ளிட்டவற்றில், புடைப்பு சிற்பங்களில் மேற்பூச்சாக சுண்ணாம்பு கலவை காரையும் பூசப்பட்டுள்ளது. இக்கலவையால் மேற்பூச்சு செய்யப்பட்ட சிற்பங்கள் மட்டும், சிதைவும், பாதிப்பும் இன்றி காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சிற்பத்தின் மீதுள்ள பூச்சு, தற்போதைய சுற்றுச்சூழல் மாசு காரணமாக, படிப்படியாக உதிர்ந்து வருகிறது. அதை பாதுகாக்க தீர்மானித்த தொல்லியல் துறையினர், அதன் மீதே தற்போது சுண்ணாம்பு கலவை பூசி உறுதிப்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து தொல்லியல் துறையினர் கூறியதாவது: சிற்பத்தின் பாதுகாப்பு, அதன் மீதே சுதை கலையம்ச வேலைப்பாடு படைப்பது, அதில் ஓவியமும் தீட்டுவது கருதி, சுண்ணாம்பு கலவை காரை பூசப்பட்டிருக்கலாம். தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் உள்ளிட்ட மற்ற இடங்களிலும், இதுபோன்ற பூச்சு உள்ளது. மாமல்லபுரத்தில், குறிப்பிட்ட சிற்பங்களில் மட்டுமே உள்ள சுண்ணாம்பு கலவை காரை பூச்சை பாதுகாக்க, பழங்கால முறையிலேயே கலவை பூசி உறுதிப்படுத்தி வருகிறோம் இவ்வாறு அவர்கள் கூறினர்.
Next Story