இரவில் மதுபார் சூறை - 2 பேர் காயம், 4 பேர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அடுத்த ராஜாக்கமங்கலம் பகுதியில் தனியார் மதுபான பார் ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு பார் மூடப்பட்டது. பார் மேலாளர் ஜான் அசுன் (45) என்பவர் பாரூக்குள் அமர்ந்து வரவு செலவு கணக்குகள் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒரு கும்பல் பார் கேட்டை தட்டி மதுபானங்கள் கேட்டுள்ளனர்.
அதற்கு ஜான் அசுன் பார் விற்பனை நேரம் முடிந்து விட்டதால், காலை 11 மணிக்கு தான் விற்பனை நடைபெறும் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கும்பல் கேட்டை திறந்து உள்ளே நுழைந்து, ஜான் அசுனை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதை தடுக்க வந்த பார் ஊழியர் சுஜின் (40) என்பவரையும் தாக்கியுள்ளனர். மேலும் ஆத்திரத்தில் அந்த கும்பல் பாரின் உள்ளே புகுந்து அங்கு கிடந்த டேபிள், செயர்களை அடித்து நொறுக்கி துவம்சம் செய்தனர். இந்த தாக்குதலில் பார் மேலாளர் ஜான் மற்றும் பார் ஊழியர் சுஜின் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
சம்பவம் தொடர்பாக ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி, படுகாயம் அடைந்த இருவரையும் ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் ராஜகமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வெள்ளிச்சந்தை பகுதியை சேர்ந்த கோவிந்தன் (36), கட்டிமாங்கோடு பகுதியை சேர்ந்த அசோக் (36), ஜெபர்சன் (34), வெள்ளிச்சந்தை ராஜ்-(37), மணவாள குறிச்சி சிங்க ராஜா (32) ஆகிய ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்து, இதில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள கோவிந்தன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.