திருத்தணி அருகே டூ-வீலரில் சாராயம் கடத்தியவர் கைது.
பைல் படம்
ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம், அய்யன்கண்டிகையில் இருந்து கள்ளச்சாராயம் காய்ச்சி திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை ஒன்றியம் வழியாக தமிழகத்திற்கு கடத்தி செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட எஸ்.பி., சீனிவாச பெருமாள் உத்தரவுபடி ஆர்.கே. பேட்டை மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் போலீசார் தேவலம்பாபுரம் சோதனை சாவடியில் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது அவ்வழியாக வந்த ஒரு இருசக்கர வாகனத்தை போலீசார் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து, 30 லிட்டர் சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. போலீசார் சாராயம் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்து, சாராயம் கடத்தி வந்த சித்துார் மாவட்டம், அய்யன்கண்டிகையை சேர்ந்த பழனி, 38 என்பவரை கைது செய்தனர்.
மேலும் கனகம்மாசத்திரம் அடுத்த நல்லாட்டூர் கிராமத்தில் திருவாலங்காடு இன்ஸ்பெக்டர் ராஜகோபால் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஏகாத்தா 45. என்பவர் சாராய விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. ஏகாத்தாவை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து, 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.