வெப்ப அழற்சியால் கால்நடைகள் பாதிப்பு

வெப்ப அழற்சியால் கால்நடைகள் பாதிப்பு

பைல் படம் 

வெயிலின் தாக்கம் அதிகரித்து கால்நடைகள் வெப்ப அழற்சியால் பாதிக்கப்படுவதாக கால்நடை பராமரிப்போர் கூறுகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டாரத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கால்நடை பராமரிப்பு பிரதான தொழிலாக உள்ளது. உழவு மற்றும் கறவை மாடுகள் அதிகளவில் பராமரிக்கப்படுகின்றன. தற்போது, கோடைகாலம் என்பதால், இப்பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து கால்நடைகள் வெப்ப அழற்சியால் பாதிக்கப்படுவதாக கால்நடை பராமரிப்போர் கூறி வருகின்றனர்.

இதுகுறித்து, உத்திரமேரூர் பகுதி கால்நடை மருத்துவர் கூறியதாவது: வறண்ட வெப்ப வானிலையால் ஆடு, மாடுகள் உடலில் வியர்வை மூலம் வெப்பம் வெளியேற்றுதல் மற்றும் மூச்சிறைத்தல் போன்ற பாதிப்புகள் இருக்கும். இதனால், நாடித்துடிப்பு அதிகரித்தும், தீவனம் எடுத்தல் குறைந்தும், சோர்ந்தும் காணப்படும். சில நேரங்களில் உயிரிழக்கவும் நேரிடலாம். இந்த விதமான பாதிப்பை தவிர்க்க, ஒரு நாளைக்கு ஐந்து முறை சுத்தமான தண்ணீரை கால்நடைகளுக்கு தரலாம். காலை வேளையில் கால்நடைகளை குளிக்க வைக்க வேண்டும். மாட்டு கொட்டகையின் மேல் குளிர்ந்த நீர் தெளிக்க வேண்டும். கூரை கொட்டகைகள் தவிர இதர கொட்டகைகள் மேல் தென்னங்கீற்று பரப்பி தண்ணீர் தெளிக்கலாம். கால்நடைகளை காலை 10:00 மணி வரை, மாலை 4:00- - 6:00 மணி வரை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டும். வெயில் நேரங்களில் அதிக அளவு பசுந்தீவனம் கொடுத்து பராமரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Read MoreRead Less
Next Story