கால்நடை உயிரின பெருக்கு பண்ணை: பலவகை மரங்கள் பொது ஏலம்
கால்நடை உயிரின பெருக்கு பண்ணையில் பலவகை மரங்களின் பலன்களை அனுபவிக்கும் உரிமம் கோரும் பொது ஏலம் நடைபெற உள்ளது.
தஞ்சையில் உள்ள கால்நடை உயிரின பெருக்கு பண்ணையில் பலன் தரும் மரங்களின் பலன்களை அனுபவிக்கும் உரிமம் பொது ஏலம் வருகிற 13 ஆம் தேதி நடக்கிறது. இது குறித்து, தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் கூறியிருப்பதாவது: தஞ்சை மாவட்டம் ஈச்சங்கோட்டை உயிரின கால்நடை பெருக்கு பண்ணையில் 675 பல வகை மரங்களின் மகசூல் பலன்களை அனுபவிக்கும் உரிமம் 2023-2024. 2024-2025, 2025-2026 ஆகிய 3 ஆண்டுகளுக்கு பொது ஏலம் வருகிற 13 ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு ஈச்சங்கோட்டையில் உள்ள கால்நடை பெருக்கு பண்ணை துணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் நடைபெறுகிறது.
இதில் 100 பனை மரங்கள், 25 இலுப்பை மரங்கள், 95 மா மரங்கள், 10 முந்திரி மரங்கள் 28 இலவம் மரங்கள், 80 வேப்ப மரங்கள், 325 புளிய மரங்கள், 7 பலா மரங்கள், 5 நெல்லி மரங்கள் ஏலமிடப்படுகிறது. ஏலம் அரசு விதிமுறைகளின்படி பகிரங்கமாக நடைபெறும். ஒவ்வொரு வகை பலன் தரும் மரங்களும் தனித்தனியே ஏலமிடப்படும். ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் வைப்புத் தொகை ரூ.3 ஆயிரத்தை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் துணை இயக்குனர், கால்நடை உயிரின பெருக்கு பண்ணை, ஈச்சங்கோட்டை என்ற பெயருக்கு 06.06.2024 அன்று அல்லது அதற்கு பிறகு பெறப்பட்ட வங்கி வரைவோலை மற்றும் ரேஷன் கார்டு அல்லது ஆதார் கார்டு நகல் ஆகியவற்றை வருகிற 12 ஆம் தேதி காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை அலுவலகத்தில் கொடுத்து பதிவு செய்து டோக்கன் பெற்றுக்கொள்ளலாம்.
10 ஆம் தேதி மாலை 5 மணிக்கு மேல் ஏலத்தில் கலந்து கொள்ள பதிவுகள் மேற்கொள்ளப்பட மாட்டாது. அதிகப்படியாக ஏலத்தொகை கோரும் ஏலதாரரின் தொகை அங்கீகரிக்கப்படும். ஏலம் எடுத்தவுடன் மொத்த ஏலத்தொகையில் 50 சதவீதமும், ஒரு ஆண்டிற்கு பின் 50 சதவீத தொகையயும் சேர்த்து ரொக்கமாக செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்த தவறினால் வைப்புத்தொகையை அவர் இழக்க நேரிடும். தவிர்க்க முடியாத காரணத்தால் ஏலத்தை நிறுத்தவோ, தள்ளி வைக்கவோ துணை இயக்குனருக்கு முழு அதிகாரம் உண்டு" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.