விருதுநகர்: மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஈரோடு மாவட்டத்தில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடனுதவிகள் வழங்கும் திட்டத்தினை காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்ததை தொடர்ந்து, விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், 1847 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.90.66 கோடி மதிப்பிலான வங்கி கடனுதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் வழங்கினார்.
அதன்படி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், 848 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.56.90 கோடி மதிப்பிலும், 6 ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கு ரூ.3.58 கோடி மதிப்பிலும், 433 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3.88 கோடி மதிப்பிலான சமுதாய முதலீட்டு நிதிகளையும், 63 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.32 இலட்சம் வட்டார வட்டார வணிக வள மையக்கடனுதவிகளையும், 3 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.9.60 இலட்சம் மதிப்பிலான மதி எஸ்க்பிரஸ் வாகனங்களையும், தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், சுய வேலை வாய்ப்புத்திட்டம் மூலம் 268 குழுக்களுக்கு ரூ.14.18 கோடி மதிப்பிலான கடனுதவிகளையும், 9 பயனாளிகளுக்கு ரூ.3 இலட்சம் மதிப்பிலான தனிநபர் தொழில் வங்கிக் கடன்களையும், 139 குழுக்களுக்கு ரூ.13 இலட்சம் மதிப்பிலான சுழல்நிதிகளையும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு ரூ.1.20 கோடி மதிப்பிலான இணைமானிய தொகைகளையும், 2 பயனாளிகளுக்கு ரூ.10 இலட்சம் மதிப்பில் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான பசுமைநிதியினையும், உயர்தர தொழில்கள் சேவை வழங்கும் திட்டத்தின் கீழ் 83 குழுக்களுக்கு ரூ.74 இலட்சம் மதிப்பிலான கடனுதவிகளையும் என மொத்தம் 1847 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.90.66 கோடி மதிப்பிலான கடனுதவி மற்றும் மானியத் தொகைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் பேசுகையில், பெண் என்பவள் ஒரு குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் மிக முக்கியமானவர். அப்படிப்பட்ட அந்த பெண்களுக்கான விடுதலை பற்றி நம்முடைய தமிழ் சமூகத்தில் நீண்ட நெடுங்காலமாக பல்வேறு தலைவர்கள், அறிஞர்கள், கவிஞர்கள் பேசியிருக்கிறார்கள்.
பெண்களுக்கான உண்மையான விடுதலை என்பது அவர்கள் நான்கு சுவர்களில் மத்தியிலிருந்து வெளி உலகத்தை பார்ப்பது, உயர் கல்வி வரை பெண்கள் படிப்பது, இவற்றை எல்லாவற்றையும் தாண்டி நவீன காலத்தில் பெண் விடுதலை என்பது நாம் புதிதாக ஒரு விளக்கத்தை சொல்ல வேண்டும் என்றால் பெண்களின் கைகளில் பணம் இருக்க வேண்டும்.
அந்த பணத்தை தங்களுடைய நலத்திற்காக, குடும்ப நலத்திற்காக செலவிடுவதற்கான முழு உரிமை இருக்க வேண்டும் என்பதுதான். பணத்தை நாம் சம்பாதிப்பதற்கான வழிமுறைகளை உருவாக்க வேண்டும். அதற்காகத்தான் மகளிர் சுய உதவி குழு போன்ற அமைப்புகள் பெண்களுக்கு பல்வேறு தொழில்களை தொடங்குவதற்கு தொடர்ச்சியான பயிற்சிகளை வழங்கி வருகிறது.
தொடர்ச்சியாக மகளிர் குழு பெண்களுக்கு பல்வேறு தனிப்பட்ட குழுக்களை தொடங்குவதற்கும் பல்வேறு திட்டங்களின் வாயிலாக நிறைய கடனுதவிகளை வழங்கி வருகிறோம். அதற்கான விழிப்புணர்வை பெண்களிடையே ஏற்படுத்த வேண்டியது மிக அவசியம். நமது மாவட்டத்தில் பல கிராமங்களில் பெண்கள் சுய உதவி குழுக்கள் மூலம் தொழில் தொடங்கி பலருக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார்கள்.
இன்றைக்கு இருக்கக்கூடிய பொருளாதார சூழலில் ஒரு பெண் குறைந்தது மாதம் 20,000 ரூபாய் வருவாய் இருக்கக்கூடிய அளவிற்கு ஒரு பெண் உயர்வதுதான் அவர்களுடைய குடும்பத்தில் ஏற்படக்கூடிய வளர்ச்சிக்கும் மாற்றத்திற்கும் மிக அடிப்படையாகும். மாவட்டத்தில் உற்பத்தி பொருட்களை டிஜிட்டல் முறையில் சந்தைப்படுத்துதலுக்கான பயிற்சி வகுப்புகள் முதற்கட்டமாக 500 பெண்களுக்கு வழங்கப்படவுள்ளன.
இது போன்று பெண்களுக்கு நிறைய தொழில் வாய்ப்புகள் இருக்கின்றன. கொஞ்சம் முயற்சி செய்தால், ஆர்வத்தோடு வந்தால் புதிய வாய்ப்புகளை தெரிந்து கொள்ளலாம். அந்த வாய்ப்புகளை எப்படி செயல்படுத்துவது என்பதை கற்றுக் கொண்டு, தனியாகவோ, குழுவாகவோ இணைந்து தொழில் புரியலாம்.
அதற்காக பல்வேறு அரசு திட்டங்கள் உள்ளன. இது போன்ற வாய்ப்புகள் எல்லாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்காக உங்களுக்கு மாவட்ட நிர்வாகம் உறுதுணையாக இருக்கும் என தெரிவித்தார்.