தஞ்சை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு வீடு கட்ட மானியத்தில் கடன்
தஞ்சை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் ஆகிய அலுவலகங்கள் வாயிலாக, அரசால் ஒதுக்கப்படும் வீடு கட்டும் திட்டங்களுக்கு, மாற்றுத்திறனாளி நபர்கள் செலுத்த வேண்டிய பங்கு தொகையினை கட்டிட ஏதுவாக, மத்திய கூட்டுறவு வங்கிகளில் பெறப்படும் கடன் தொகையில் அதிகபட்சம் ரூபாய் 1.50 லட்சம் அல்லது அதற்கு குறைவாக கடன் பெறும் தொகைக்கு ஏற்றவாறு வட்டி தொகை மானியமாக வழங்கப்படும்.
மத்திய கூட்டுறவு வங்கி மூலம் பெறும் வீட்டுக் கடன் தொகையை தவறாமல் திருப்பி செலுத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகளுக்கு வட்டி தொகையினை மானியமாக வழங்கலாம். இத்திட்டத்தின் வாயிலாக கடன் உதவி பெறுவதற்கு குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
40 விழுக்காடு அல்லது அதற்கு மேற்பட்ட மாற்றுத்திறன் உடைய நபர்கள் தகுதியுடையவர் ஆவார்கள். மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை, குடும்ப அட்டை, பெற்று இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு இவ்வட்டியில்லா கடன் தொகை வழங்கலாம்.
எனவே, இத்திட்டத்தின் மூலம் வங்கி கடன் பெற விருப்பம் உள்ள மாற்றுத்திறனாளிகள் தங்கள் பகுதிக்குட்பட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் மேற்கண்ட ஆவணங்கள் உடன் வருகின்ற 31.01.2024 அன்றுக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் கேட்டுக் கொண்டுள்ளார்.