திண்டிவனத்தில் தொழில் முனைவோர்களுக்கான கடன் மேளா - ஆட்சியர் தகவல்
தமிழ்நாடு அரசு, விழுப்புரம் மாவட்ட எம்.எஸ்.எம்.ஈ. நிறுவனங்களின் வளர்ச்சிக்காக 2023-24-ம் ஆண்டில் ரூ.1,390 கோடி கடன் வழங்க வேண்டுமென ஆண்டுக்கடன் திட்ட அறிக்கையில் இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை வென்றடைய காலாண்டுக்கு ஒருமுறை கடன் வசதியாக்கல் முனைப்பியக்கம் என்னும் லோன் மேளா மாவட்ட தொழில் மையம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் எம்.எஸ்.எம்.ஈ. கடன் வசதியாக்கல் முனைப்பியக்கம், மாவட்ட தொழில் மையம் சார்பில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் திண்டிவனத்தில் உள்ள ஓட்டல் ஹரிஹரபவனில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் கடன் கோரி விண்ணப்பங்களை பதிவு செய்யவும், பரிசீலிக்கவும் வழிவகை செய்யப்படும். ஆர்வமுள்ள தொழில் முனைவோர், வணிகர்கள், இளைஞர் மற்றும் மாணவர்கள் திறன் மேம்பாடு, தகுதியும் வாய்ப்புமுள்ள தொழில், வணிகத்திட்டங்களை கண்டறிதல், திட்ட அறிக்கை தயாரித்தல், தொழில் மற்றும் வணிக நிறுவனங்களை நிறுவுதல், நிர்வகித்தல், நிதி நிறுவனங்களுடன் தொடர்பில் இருத்தல், சந்தைப்படுத்துதல், ஏற்றுமதி உள்ளிட்ட தொழில் மற்றும் வாணிகம் தொடர்பான அனைத்து விஷயங்கள் குறித்தும் முறையான தகவலும், தெளிவும் பெறலாம். ஊக்கமும் தேவையும் உள்ள யாவரும் இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு விழுப்புரம் மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை நேரடியாகவோ அல்லது 94437 28015 என்ற செல்போன் எண்ணிலோ தொடர்புகொண்டு பயன்பெறலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.
Next Story