தனியார் நிதி நிறுவனத்திற்கு பூட்டு - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

X
பைல் படம்
குமரி மாவட்டம் அருமனை அருகே பாக்கியபுரத்தில் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிதி நிறுவனத்தில் தங்க நகைகளை அடமானம் வைத்து வாடிக்கையாளர்கள் பணம் பெற்று வந்தனர். மேலும் அந்த பகுதியை சேர்ந்த பலரும் பணத்தை வைப்புத் தொகையும் செலுத்தியுள்ளனர். மேலும் இங்கு பலருக்கு கடன்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிதி நிறுவனத்தில் அடமானம் வைத்திருந்த நகையை மீட்க வாடிக்கையாளர்கள் பலர் சென்றனர். அப்போது நகைகள் இங்கு இல்லை. பணத்தை கட்டி விட்டு செல்லுங்கள் இரண்டு நாட்களுக்கு பின்னர் நகையை தருகிறோம் என ஊழியர்கள் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் பலர் அங்கிருந்த ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாடிக்கையாளர்கள் தினந்தோறும் நகையை மீட்பதற்காக அங்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், கடந்த சில நாட்களாக அந்த நிதி நிறுவனம் பூட்டப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கிடையில் நிதி நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் மேலாளராக இருந்த இருவரும் மாறி மாறி அருமனை போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags
Next Story
